ஜனநாயக ரீதியாக மக்கள் தந்த ஆணையின் மூலம் தாங்கள் அடைந்திருக்கும் வெற்றிக்கு எவ்விதமாக நீங்கள் மதிப்பளிக்கிறீர்களோ, அவ்விதமாக எமது வட கிழக்கு மக்கள் அளித்திருக்கும் ஜனநாயகத் தீர்ப்பை அரசாங்கம் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அவ்வாறு மக்களின் ஜனநாயகத் தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டுமானால் அரசியல் தீர்வைக் காணும் விடயத்திலும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி, கட்டுமானம் போன்ற பணிகளிலும் தீர்வுகாண தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்மை ஈடுபடுத்துவது அரசின் கடமையாகும் எனவும் அவர் கூறினார்.
திருகோணமலையில் நேற்று நடந்த தமிழரசுக் கட்சியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவான 14 உறுப்பினர்களின் முதல் கூட்டத்தின் முடிவில் நடந்த செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்படி அறிக்கையை குறித்த உறுப்பினர்கள், கட்சி சார்பாக சம்பந்தன் வெளியிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
"வட கிழக்கில் எமது கட்சி அதிகப்படியான உறுப்பினர்களுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தந்த ஆணையை முழுமையாக நிறைவேற்ற அயராது உழைப்போம் என நாம் எமது மக்களுக்கு வாக்குறுதியளிக்கின்றோம்.
நாம் முன் வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளனர். தேர்தல் நிலைமைகள் மோசமாக இருந்தபோதும் வட கிழக்கில் எந்த ஒரு தமிழ்க் கட்சி உறுப்பினரும் தெரிவாகாத நிலையில், வடக்கு கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் போட்டியிட்டு தமிழரசுக் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ளது.
தேர்தல் கால சூழல்களில் எமது கட்சியின் அவதானத்தின்படி இரண்டு விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒன்று, தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் பிரச்சினைக்கு ஒருமித்த நாட்டிற்குள் நியாயமானதும் நீதியானதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வை அடைதல்.
இரண்டு, நடந்த யுத்தம் காரணமாக முற்றாகச் சீரழிந்துள்ள எமது மக்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கின்ற உடனடியான தேவைகளைப் பூர்த்தி செய்து யுத்தம் முடிந்து ஒரு வருடமான போதும் ஏறத்தாழ 80 ஆயிரம் மக்கள் அரச தடுப்பு முகாம்களில் எவ்விதமான சட்ட அங்கீகாரமும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எவ்விதமான குற்றமும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உயர் பாதுகாப்பு வலயங்களின் அதிகரிப்பு காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் தொழில் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இராணுவத்தின் பிரசன்னம், வட கிழக்கில் தேவைக்கதிகமாக தென்படுகிறது. எம்மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு எமது குழு தலைவணங்குகிறது.
எனவே அவர்களால் வழங்கப்பட்ட ஆணையை முழுமையாக நிறைவேற்ற அயராது உழைப்போம் என வாக்குறுதியளிக்கின்றோம். இந்த விடயத்தில் தாங்கள் அடைந்திருக்கும் வெற்றிக்கு எவ்வாறு மதிப்பளிக்கிறீர்களோ, அவ்விதமாக வடக்கு கிழக்கு மக்கள் அளித்திருக்கும் ஜனநாயகத் தீர்ப்பையும் ஏற்று அங்கீரிக்க வேண்டும்.
அரசாங்கத்திற்கு மேற்படி விடயங்களில் ஆக்கபூர்வமான முறையில் ஒத்துழைக்க நாம் தயாராக இருக்கின்றோம். அரசு இதனை உணர்ந்து செயற்பட்டால், தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, நாட்டுக்கும் அது நன்மையளிக்கும். இது குறித்த அரசின் பதிலை நாம் எதிர்பார்க்கின்றோம்.
நாங்கள் பல மணி நேரம் இன்று பேசி இம்முடிவுக்கு வந்துள்ளோம். இதனை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான 14 பிரதிநிதிகளும் ஏற்றுள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டுக்கும், அரசுக்கும், மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் எமது முடிவைச் சமர்பிப்பது எமது கடமையாகும் என்று கருதுகின்றோம்" என்றார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.