ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்கும் வரை மட்டுமே நிலைத்திருக்கும் என்றும் அதற்குப் பின்னர் அமைச்சரவையை மறுசீரமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை புதனன்று பதவியேற்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் 225 உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியிட்டதன் பின்னரே புதிய அமைச்சரவை 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பதவியேற்கவிருக்கின்றது.
நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியினதும் திருகோணமலை மாவட்டத்தில் கம்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்தினதும் வாக்களிப்பு நிறைவடைந்ததன் பின்னரே ஏழாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் அடங்கிய வர்த்தமானி புதனன்று வெளியிடப்படும்.
நாவலப்பிட்டி தொகுதி மற்றும் கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்திற்கான மீள் வாக்களிப்பு நாளை செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணிமுதல் 4.00 மணிவரை நடைபெறும். அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரதமர் பதவி வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டே புதிய அமைச்சரவையின் பதவிக்காலத்தை நவம்பர் மாதம் வரை மட்டும் மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
கடந்த அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 51 பேரும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் 39 பேரும் பிரதி அமைச்சர்கள் 19 பேருமாக 109 அமைச்சர்கள் அங்கம் வகித்தனர். இம்முறை அமைச்சரவையை 35க்குள் மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
புதிய அமைச்சரவையில் இளம் உறுப்பினர்களும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தமையினால் அமைச்சரவையை 35க்குள் மட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதுடன் பிரதமர் பெயர் குறிப்பிடுவது தொடர்பிலும் இழுபறி நிலை தோன்றியுள்ளது.
இதனையடுத்தே புதிய அமைச்சரவையை நவம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை மட்டுப்படுத்தி நவம்பரில் அமைச்சரவையை மறுசீரமைப்பதற்கு கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அது மட்டுமன்றி கல்வி, சுகாதாரம், மின்சக்தி, எரிபொருள்துறை, உள்நாட்டலுவல்கள் உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய அமைச்சரவையில் பிரதமராக, முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவையே மீண்டும் பெயர் குறிப்பிடுவதா? அல்லது சிரேஷ்ட அமைச்சர்களான தி.மு. ஜயரட்னவையா? இல்லையேல் மைத்திரிபால சிறிசேனவையா? இன்றேல் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பசில் ராஜபக்ஷவையா பெயர்குறிப்பிடுவது என்பது தொடர்பில் இழுபறி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியலை நிரப்புவதில் சிக்கல் தோன்றியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்குத் தேசியப்பட்டியலில் இடம் வழங்கப்படமாட்டது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்ததை அடுத்து கட்சிக்குள் நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் வெற்றியீட்டியமையினால் அவரது இரண்டாவது பதவிக்காலம் 2010 நவம்பர் 18 ஆம் திகதியே ஆரம்பமாகின்றது என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.