முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது தொடர்பாக அரசு நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள போதும் அரசுக்கு எதிரான சதி முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள் 36 பேரையும் விசாரணை செய்ததில் பொன்சேகா மீதான பல பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளன என்று சிறிலங்கா குற்ற புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கையில் கூறியுள்ளதாவது:-
அரசதலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடு முழுவதிலும் தேர்தல் பணி என்ற பெயரில் சரத் பொன்சேகா தனக்கேற்றவாறான 'குட்டி இராணுவ ஆட்சி' ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார். இந்த திட்டத்தின் பிரகாரம் பொன்சேகாவுக்கு நெருக்கமான முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் சகல மாவட்டங்களுக்கும் சென்று அப்பகுதிகளில் வசிக்கும் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் தலைமறைவாக உள்ள இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் ஆகியோரை பொன்சேகாவுக்கு ஆதரவான இரகசிய படையில் தேர்தல் பிரசாரக்குழுவினர் என்ற பெயரில் இணைத்துள்ளார். இந்த முன்னாள் இராணுவ அதிகாரி சிறிலங்கா இராணுவத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில் கொமாண்டொ படையணியின் தளபதியாக பதவி வகித்தவர்.
பொன்சேகாவுக்கு ஆதரவாக இந்த இரகசிய படையணிக்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்ட முன்னாள் மேஜர் ஜெனரலின் இந்த பணிக்கு இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் தர அதிகாரி ஒருவர் சுமார் 7 கோடி 30 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளார். இவர்களின் திட்டப்படி பொன்சேகாவின் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாவரை ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் பொன்சேகாவுக்கு ஆதரவான இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிவினருக்கும் மாதம் 75 ஆயிரம் ரூபாவரை செலுத்தப்பட்டுள்ளது. மாளிகாவத்தையில் உள்ள விகாரையில் அண்மையில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரித்ததில் இதுதொடர்பான பல விவரங்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் சில தாக்குதல்களை மேற்கொள்ளும் நோக்குடன் அனுராதபுரத்திலிருந்து பாலன் என்ற வாகனஓட்டுனரின் உதவியுடன் பொரளைக்கு கொண்டுவரப்பட்ட ஆயுதங்களே பின்னர் மாளிகாவத்தை பகுதிக்கு மாற்றப்பட்டன. அனுராதபுரத்தில் பாதாள உலக புள்ளி ஒருவருக்கு 7 லட்சம் ரூபா கொடுத்து, அவரது உதவியுடனேயே இந்த ஆயுதங்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களுடன் பொன்சேகாவுக்கு உள்ள நெருங்கிய தொடர்புகள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளன.
இதேவேளை, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த மற்றும் தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் ஆகியோரின் படுகொலை தொடர்பில் பொன்சேகாவுக்கு உள்ள தொடர்புகளும் தற்போது கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகளின் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளன.
கொழும்பு பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் 211 ஆவது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிக்கொலன கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதில், ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் படுகொலை விவகாரங்களில் பொன்சேகாவின் உத்தரவுகள், சம்பந்தப்பட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன - என்று புலனாய்வு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இராணுவத்தின் 211 ஆவது படைப்பிரிவின் தளபதி துமிந்தவை கைது செய்துள்ள சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் தனது உத்தரவின் பேரில்தான் லசந்த படுகொலை இடம்பெற்றதாக வாக்குமூலம் தரும்படி வற்புறுத்திவருகிறார்கள் என்றும் இந்த தகவலை தனக்கு துமிந்தவின் மனைவி கூறினார் என்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான சண்டே லீடர் பத்திரிகையில் பொன்சேகா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.