Thursday, February 11, 2010

தடுப்புக்காவில் இருந்தவாறு மனைவியின் தலைமையில் தனது கட்சியை தேர்தலில் களமிறக்க பொன்சேகா முடிவு!

தடுப்புக்காவலில் இருந்தவாறே புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு தனது மனைவியை தலைவியாக நியமித்து எதிர்வரும் பொதுதேர்தலில் களமிறக்குவதற்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா திட்டமிட்டுள்ளார் என்று பொன்சேகாவின் மனைவி அனோமாவுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்றைக் கட்டியெழுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இரண்டு பொன்சேகாவை அந்தக் கட்சிகளின் தலைவராக்குவதற்காக தமது கொள்கைகளிலும் ஏனைய விடயங்களிலும் மாற்றம் செய்ய இணங்கியிருப்பதாக அந்த தகவல் மேலும் தெரிவித்துள்ளது.

தடுத்துவைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா விடுதலையாகி வரும்வரையில் இந்தக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பு அனோமா பொன்சேகாவிற்கு வழங்கப்படவுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன ரணதுங்க உட்பட மூத்த அரசியல்வாதிகள் சிலர் அந்தக் கட்சியில் இணைய இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகா தலைமையிலான இந்த புதிய அரசியல் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை. ஆனால், தமது புதிய கட்சிக்கு அன்னப்பறவைச் சின்னத்தை வழங்குமாறு புதிய ஜனநாயக முன்னணியிடம் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இதுகுறித்து அனோமா பொன்சேகாவிடம் கேட்டபோது எந்தச் சந்தர்ப்பத்திலும் தான் தனது கணவரின் வழி நிற்பார் என்றும் இருப்பதாகவும் செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபடுமாறு நேற்று தன்னைச் சந்தித்த மதத் தலைவர்கள் பலர் கேட்டுக்கொண்டதாகவும் எனினும், இதுவரை தான் அரசியலில் ஈடுபடுவது குறித்து தீர்மானம் எதுவும் எடுக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தனது கணவருக்காக எந்த அர்ப்பணிப்புக்களையும் மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாக வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தான் தனது கணவரை தடுப்புக்காவலில் சந்தித்தபோது தமது கட்சி அலுவலகத்தை மூடவேண்டாம் எனக் கூறியதுடன் வழமைபோல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு அவர் அறிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.