Wednesday, February 24, 2010

அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இலங்கை அரசு கடும் கண்டனம்!

சரத் பொன்சேகா கைது மற்றும் தமிழர்கள் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசு தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகா கைது விவகாரம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் ரொபர்ட் ஓ பிளாக் வெளியிட்ட கருத்து மற்றும் உலக தமிழர் பேரவை ஒழுங்கு செய்துள்ள மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகார செயலர் டேவிட் மிலிபான்ட் கலந்துகொள்கின்றமை ஆகிய விடயங்களுக்கே இலங்கை அரசு இந்த கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் நீதி விவகாரங்களில் தென் ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளாக் கருத்துத் தெரிவிக்க உரிமை இல்லை என அரசாங்கத்தின் சார்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவிலுள்ள உலக தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் உரையாற்றவுள்ளமை தொடர்பாக கொழும்பிலுள்ள பிரித்தானிய பதில் உயர்ஸ்தானிகரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

பிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை என்னும் அமைப்பின் கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கலந்து கொண்டதை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முன்வைத்து செயற்பட்டு வருகின்ற இந்த உலகத் தமிழர் பேரவை என்னும் அமைப்பை, விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவு அமைப்பாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை அரசாங்கம் அதில் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் கலந்துகொள்வது இலங்கையின் இறைமையை குறைத்து மதிப்பிடும் செயலாக அமையும் என்று கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான பதில் பிரிட்டிஷ் தூதுவர் மார்க் கூடிங் அவர்களை அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவர்கள், தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பெரும்பாலும் மேற்கு நாடுகளில் இயங்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புக்களை ஒரு குடையின் கீழ் இணைத்து செயற்படும் அமைப்பாக உலக தமிழர் பேரவையை விபரித்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை ஒன்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகளில் அந்த அமைப்பு செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது இலங்கையின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு நகர்வு என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

ஆகவே இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அங்கு அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவத்ற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்குமானால், உலக தமிழர் பேரவையின் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளக் கூடாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால், இன்று காலையில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த அந்தக் கூட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.