சரத் பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டதாகக் கூறும் போலியான ஒப்பந்த ஆவணம் ஒன்றினை அரசாங்கம் அச்சடித்து வருகின்றது. அத்துடன் அந்த போலியான ஆவணத்தில் சம்பந்தன் பா.உ. சிங்களத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போலியான ஆவணத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்த நாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம், டக்ளஸ் தேவானந்தாவுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையினை வெளிப்படுத்த வேண்டுமென நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். அதை வெளிப்படுத்தாத அரசாங்கம் இல்லாத ஒப்பந்தமொன்றை போலியாக தயாரித்து மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றது என்றும் அவர் கூறினார்.
நேற்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சியின் கூட்டமைப்புடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் எந்த வித ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. சரத் பொன்சேகாவின் மீது உள்ள நம்பிக்கையினாலேயே அவர்கள் ஜெனரலுக்கு ஆதரவு வழங்குகின்றனர். அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே அண்மையில் கூறியிருந்தார். இவ்வாறான நிலைமையிலேயே இந்த போலியான ஆவணத்தை அரசாங்கம் அச்சிட்டு வருகின்றது.
பொரளையில் அச்சிடப்பட்டு வரும் அந்த போலியான ஆவணத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க சோமவன்ச அமரசிங்க டில்வின் சில்வா மற்றும் சம்பந்தன் ஆகியோர் கையொப்பமிட்டிருப்பதைப் போல தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான போலியான ஆவணத்தை தயாரித்து தென்னிலங்கை மக்கள் மத்தியில் விநியோகித்து அதன் மூலம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவினை குறைத்து அதில் அரசியல் லாபம் பெற்றுக்கொள்வதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்த போலி ஆவணத்தில சம்பந்தனின் கையொப்பம் சிங்களத்தில் இடம் பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை பல்வேறு வழிகளில் முடக்கி வன்முறைகளை பிரயோகித்து வந்த அரசாங்கம் ஜெனரல் பொன்சேகாவின் பின்னால் அணி திரண்டு வரும் மக்களை கண்டு பயந்தே இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீதும் எதிர்க்கட்சிகளின் மீதும் பாரிய அளவில் அரசாங்கம் சேறு பூசி வந்தது மாத்திரமல்லாமல் பொய்க் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி வந்தது. அது வெற்றியளிக்காமல் போகவே புதுப்புது நாடகங்களை தயாரித்து அரங்கேற்றி வருகின்றது. அதன் ஒரு கட்டமே இதுவாகும். என்றார்






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.