Thursday, December 03, 2009

தென்னிலங்கை வாழ் தமிழர்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு மனோ கணேசன் எம்.பி வேண்டுகோள்


தென்னிலங்கை முழுக்க வாழும் தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்படவிருக்கும் சரத் பொன்சேகாவிற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு மனோ கணேசன் எம்.பி. கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அடுத்து இறுதி முடிவு தேர்தல் நியமன தினத்திற்கு முன் அறிவிக்கப்படும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணியினது அரசியல் குழு எடுத்துள்ள முடிவை கட்சியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கொழும்பில் இன்று (03.12.2009) காலை கிராண்ட் ஒரியன்டல் விடுதியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

இம்மாநாட்டில் மனோ கணேசன் எம்பியுடன், கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன், ஜதொகா பொதுச்செயலாளர் எம்.சிவலிங்கம், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.இராஜேந்திரன், சிரேஷ்ட உபதலைவர் கங்கை வேணியன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மொஹமட் ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் மனோ எம்.பி. தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,

ஆட்சி மாற்றத்திற்கான வாக்கு

சரத் பொன்சாகாவிற்கு எந்தவித அரசியல் நிபந்தனைகளுமின்றி வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்களை நாம் கோரவில்லை. தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன்றைய ஆட்சியை மாற்றும் வாக்குகளாகும். யுத்த வெற்றியினை முன்னிலைபடுத்தி தேர்தல்களில் இலகு வெற்றி பெற்றிடலாம் என இந்த அரசாங்கம் மனப்பால் குடித்தது. ஆனால் யுத்த வெற்றிக்கு காரணமானவரே தேர்தலில் பொது வேட்பாளராக எதிரணியினால் நிறுத்தப்படுவதால் இன்று இந்த அரசாங்கம் அதிர்ந்துபோய்யுள்ளது. இந்த ஆட்சியை மாற்றுவதற்கு இதைவிட சிறந்த வழி எதுவும் கிடையாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு

இன்றைய ஆட்சியை மாற்றியமைத்து புதிய தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் நமது செயற்திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

வடகிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களான யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடத்தப்படும்.

இன்றைய அரசாங்கத்தை மாற்றிடவேண்டும் என்ற உணர்வுகள் இன்று வடகிழக்கில் தமிழ் மக்கள் மனங்களில் ஒலிப்பதாக எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

அந்த உணர்வுகளை எதிரொலித்து ஆட்சிமாற்றம் என்ற ஒரே அடிப்படையில் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரிக்கவேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மலையக கட்சிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு

தென்னிலங்கையின் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருகும் தமிழ் மக்கள் மத்தியிலே இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற உணர்வு கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது.

எவர் என்ன சொன்னாலும் இதுதான் யதார்த்தம். எனவே நமது மக்களின் எண்ணக்கருத்திற்கு ஏற்ப மலையக கட்சிகள் செயற்பட வேண்டும். ஆட்சி மாற்றத்திற்காக மலையக கட்சிகள் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழர் போராட்டம்

இந்நாட்டிலே இனியொரு ஆயுத போருக்கு இடம் கிடையாது. போர் முடிந்துவிட்டது. ஆனால் போராட்டம் முடியவிலலை. தமிழ் மக்களின் போராட்டத்தின் வடிவம் மாறவேண்டும். அது ஜனநாயக போராட்டமாக முன்னெடுக்கப்படவேண்டும்.

அதிகார பகிர்விற்காகவும், நீதி, சமாதானம் ஆகிய நோக்கங்களுக்காகவும் அரசியல் முதிர்ச்சியுடனான சாணக்கியத்துடன் நாம் காய்நகர்த்த வேண்டும். எமது போராட்டத்தை சிங்கள அரசியல் அணிகளுடன் இணைந்து முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களை நாம் ஒருபோதும் தவறவிடக்கூடாது.

புலம் பெயர் தமிழர்கள்

இலங்கையிலே ஆட்சி மாற்றத்திற்கும், தமிழர்களின் போராட்ட வடிவத்தின் ஜனநாயக மாற்றத்திற்கும் புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும். களத்தில் இருந்தபடி நேரடியாக ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ் தலைமைகளை அடையாளங்கண்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

தார்மீக உரிமை

பல்லாண்டுகளாக நமது மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து நிற்கும்பொழுது நாம் நமது மக்களுடன் இருந்து கொண்டிருக்கின்றோம். பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் எமது கடமையை உறுதியுடன் செய்து வந்துள்ளோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் பேரினவாதிகளுக்கு துணைபோனது கிடையாது.

நமது ஜனநாயக மக்கள் முன்னணி தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழ் மக்களை நாடிவரும் கட்சியல்ல என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

எனவே தமிழ் மக்களுக்கு வழிகாட்டுவதற்கும், கோரிக்கை விடுப்பதற்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு முழுமையான தார்மீக உரிமை இருக்கின்றதாக நாங்கள் நம்புகின்றோம்.

நான்கு சாத்தியங்களில் இதுவே நடைமுறை சாத்தியமானது

ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் மக்களின் முன்னால் நான்கு சாத்தியங்கள் இருப்பதாக நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்களிப்பது, ஆளுங்கட்சி கூட்டணிக்கு வாக்களிப்பது, பொது தமிழ் வேட்பாளரை நியமித்து வாக்களிப்பது, தேர்தலை பகிஷ்கரிப்பது ஆகிய நான்கு சாத்தியங்களே அவையாகும்.

பகிஷ்காரம் எங்களுக்கு உடன்பாடானது அல்ல

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலக்கட்டத்திலிருந்து இன்றுவரையும் தேர்தல் பகிஷ்கரிப்பை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்நிலையில் நாங்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் அணியின் அதிகாரம் தமிழ் மக்கள் மீது பாதிப்பை செலுத்துகின்றது.

இந்நிலையில் எமது வாக்களிப்பின் மூலமாக அந்த அதிகார அணியை இயன்றவரையில் எமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறையின்றி இனிமேலும் இருக்கமுடியாது.

இங்கே போட்டியிடும் இருவருமே இராவணர்கள் தான். இந்த இராவணர்களில் பெரிய இராவணன் யார்? சின்ன இராவணன் யார்? என்று சிந்தித்து முடிவு செய்யவேண்டிய நிலைமையில் தமிழ் இனம் இருக்கின்றது. இதைத்தவிர நடைமுறை சாத்தியமான மாற்று வழி கிடையாது.

மனச்சாட்சிபடி மக்களை வாக்களிக்க கோரமுடியாது

தமிழ் மக்களிடம் தமது சொந்த விருப்பத்தின்படி வாக்களியுங்கள் எனக்கூறிவிட்டு எமது கடமையில் இருந்து நாம் நழுவ முடியாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் மக்களுக்கு தலைமைத்துவம் வழங்கி வழிகாட்டவேண்டிய வரலாற்று கடமையை நாம் நிறைவேற்றுவோம். ஏனைய தமிழ் கட்சிகளும் மக்களுக்கு தெளிவாக வழிகாட்டவேண்டும் என நாம் கோருகின்றோம்.

சர்வதேச சமூகம்

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலமாகவும், ஆயுத போராட்டத்தின் மூலமாகவும் உலகத்திற்கு தமது அபிலாசைகளை மீண்டும் மீண்டும் எடுத்து கூறியிக்கின்றார்கள். மலையக தமிழர்களின் குடியுரிமை பறிப்பிலிருந்து, சிங்களம் மட்டும் சட்டம், தந்தை செல்வாவின் ஒப்பந்தங்கள் உள்ளிட்டு நடந்து முடிந்த போரின் இறுதிக்காலக்கட்டங்களில் நமது மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டது வரை அனைத்தையும் இந்த உலக சமூதாயம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது.

சர்வதேச சமூகமும், குறிப்பாக இந்திய அரசாங்கமும் எதுவும் தெரியாத அப்பாவிகள் என எவரும் சொல்ல முடியாது. தமிழ் மக்களின் மீதான கொடுமைகளுக்கு சர்வதேச சமூகம் மிகப்பெரும் பதிலை வரலாற்றுக்கு சொல்லியே ஆகவேண்டும்.

எமது மக்கள் தொடர்பில் இந்தியா உட்பட சர்வதேச சமூகம் தனது கடமையை சரியாக செய்யவில்லை என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. எனவே எமது ஜனநாயக செயற்பாட்டிற்கு இந்தியாவும், சர்வதேச சமூகமும் துணை வருவதை வரவேற்போம்.

ஆனால் எமது எதிர்காலத்தை முழுமையாக சர்வதேச சமூகத்திடம் மாத்திரம் ஒப்படைத்துவிட்டு நாம் எதிர்பார்த்து காத்திருக்க முடியாது. உலக சமூதாயத்திற்கு எடுத்து கூறுகின்றோம் என்று சொல்லி எமக்குரிய சந்தர்ப்பங்களை நாம் கைநழுவிவிட முடியாது.

இன்றைய அரசாங்கம்

இன்றைய அரசாங்கத்திற்கு வாக்களிப்பதற்கு தமிழ் மக்களுக்கு எந்தவொரு காரணமும் கிடையாது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும், மனித உரிமைகள் தொடர்பிலும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களிடம் தோல்வியடைந்துவிட்டது.

சொல்லொணா துன்பங்களை விளைவித்த யுத்தத்திற்கு இந்த அரசாங்கம் அரசியல்-இராணுவம் தலைமையை தந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்று சொல்லி தாமே ஆரம்பித்து வைத்த சர்வகட்சி கடையை இந்த அரசாங்கமே இழுத்து மூடிவிட்டது.

இன்று இந்த யுத்தத்தையடுத்து தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தையும் இந்த அரசாங்கம் தவறவிட்டு விட்டது.

தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இன்று இந்த அரசாங்கத்திற்குள்ளேயே தமிழ் கட்சிகளுக்கும், சிங்கள தீவிரவாத கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் முற்றியுள்ளன.

இந்தியாவிடம் ஒன்றும், ஏனைய சர்வதேச சமூகத்திடம் ஒன்றும், சிங்கள மக்களிடம் ஒன்றும், தமிழ் மக்களிடம் ஒன்றும் என மாற்றி, மாற்றி பேசி தமிழ் மக்களின் வாழ்க்கையையும், மண்ணையும் அபகரிக்கும் நோக்கம் இந்த அரசாங்கத்தின் அடிப்படை வேலைத்திட்டமாகும்.

இன்று எதையாவது சொல்லி தமிழ் மக்களின் வாக்குகளையும் வாங்கி ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதே இவர்களது நோக்கம்.

இவர்களது ஆட்சி தொடருமானால் பல இனங்களுக்கும், பல மதத்தவர்களுக்கும் சொந்தமான நமது நாடான இலங்கை ஒரே இனத்திற்கும், ஒரே மதத்தவருக்கும் மாத்திரமே சொந்தமான நாடாக விரைவில் மாற்றப்படும். இது ஒன்றே இந்த அரசாங்கத்தின் ஒரேயொரு அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்.

எதிர்க்கட்சி பொது வேட்பாளர்

சரத் பொன்சேகாவிற்கு வாக்களிப்பதானது எமது வரலாற்று கடமையல்ல. அது நாம் வாழுகின்ற காலத்தின் கட்டாயமாகும். சரத் பொன்சேகா அவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு அணியிடமும் உறுதியளித்துள்ளார்.

கடந்தகால ஜனாதிபதிகளின் இத்தகைய உறுதிமொழிகளுக்கும், தற்போதை நடைமுறைக்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடுகள் சிந்திப்பவர்களுக்கு புரியும். கடந்தமுறைகளில் ஜேவிபி மாத்திரமே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை எதிர்த்தது.

இன்று ஏறக்குறைய எல்லா கட்சிகளும் இதை எதிர்க்கின்றன. சரத் பொன்சேகா பாரம்பரிய அரசியல்வாதியல்ல. அவருக்கு அரசியல் கட்சி கிடையாது. அவர் இராணுவ வீரராக இருந்துள்ளார்.

தமிழ் மக்களை பொறுத்தவரையிலே இராணுவ ஆட்சி என்பது புதிய ஒரு அனுபவமல்ல. ஆனால் அது சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு புதிய விடயமாகும். எனவே இராணுவ ஆட்சி ஏற்படும் சாத்தியம் கிடையாது. இது அரசாங்கத்தின் கட்டுக்கதையாகும்.

13வது திருத்தமும், தேசிய இனப்பிரச்சினையும்

பொது வேட்பாளர் சரத் பொன்சேகா 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என பகிரங்கமாக கூறியிருப்பது நல்ல விடயம். இந்த நிலைப்பாடுகூட இதுவரையில் ஆளுங்கட்சியின் வேட்பாளர் கூறவில்லை.

சரத் பொன்சேகா தான் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதாக அவரே உறுதியளித்துள்ள காரணத்தினாலே அவர் இடைக்கால ஜனாதிபதியாகும். எனவே தொடர்ந்து ஜனாதிபதியாக இருக்கப்போகின்ற இன்றைய ஆளுங்கட்சியின் வேட்பாளர்தான் தமது தீர்வு திட்டத்தை உடனடியாக அறிவிக்கவேண்டும்.


மேலும் ஆளுங்கட்சியிடம் இன்று ஆட்சி இருக்கின்ற காரணத்தினாலேயே அவர்கள் அடுத்த தேர்தல்வரை காத்திருக்க தேவையில்லை. 13வது திருத்தத்தை முழுமையாக உடன் அமுல் செய்துவிட்டு அதற்கு பிறகு 13வது திருத்தத்திற்கு அப்பால் அரசாங்கம் செல்லவேண்டும்.

அதேவேளையில் இனப்பிரச்சனை தீர்வை ஜனாதிபதி சரத் பொன்சேகாவிடம் நாம் விட்டுவிடப் போவதில்லை. அடுத்த வருடம் முற்பகுதியில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் உருவாகும் தேசிய அரசாங்கத்தின் முதற்கடமை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாகும்.

சரத் பொன்சேகாவிடம் நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாடுகள்

ஜனாதிபதி தேர்தலை அடுத்து ஐதேக, ஸ்ரீலசுக மக்கள் பிரிவு, ஜனநாயக மக்கள் முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஜேவிபிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுத்து சர்வக்கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை ஜனாதிபதி நியமிப்பார்.

பொதுத் தேர்தலை தொடர்ந்து புதிய அரசாங்கம் உருவாகும் வரைக்கும் இந்த காபந்து அரசாங்கம் செயற்படும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்படும்.

ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும். 17வது திருத்தம் நடைமுறையாக்கப்பட்டு, சுயாதீன ஆணைக்குழுக்கள் உடன் நியமிக்கப்படும். உடனடியாக எரியும் பிரச்சினைகளான தமிழ், முஸ்லிம் அகதி மக்களின் மீள் குடியேற்றம், சிறைகளிலும், தடுப்பு முகாமக்களிலும் வாடும் தடுப்பு கைதிகள் விவகாரம் ஆகியவை தொடர்பில் இரண்டு தேசிய சபைகள் நிறுவப்படும்.

நமது மக்கள் தமது சொந்த கிராமங்களில் சென்று குடியேறுவதை மக்கள் பிரதிநிதிகள் கண்காணிப்பார்கள். அதேபோல் நீண்டகால கைதிகளுக்கு பொது மன்னிப்பு, துரித சட்ட நடவடிக்கை, சட்டரீதியான பிணை, புனர்வாழ்வு ஆகியவை உடனடியாக முன்னெடுக்கப்படும்.

இந்த விவகாரங்கள் தொடர்பில் நான் நேரடியாக பங்களித்து கண்காணிப்பேன் என்பதை உறுதிப்பட தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.