Thursday, December 03, 2009

புலிகளின் 3 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றன 600 வங்கிக் கணக்குகளையும் அரசுடைமையாக்க நடவடிக்கை- அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சொத்துக்கள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்திற்கு உரித்துடையவை. அவற்றை அரச உடைமையாக்கிக் கொள்வதற்கான சட்ட ஆலோசனைகளைப் பெறும் நடவடிக்கையில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டு வருகின்றது என்று தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அந்த வகையில் புலிகள் இயக்கத்தின் சர்வதேசத் தொடர்பாளரும், புதிய தலைவருமாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள கே. பி.என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் தற்போது இலங்கையை நோக்கிக் கொண்டுவரப்படுகின்றன.

அத்துடன் அவர் சர்வதேச ரீதியில் சுமார் 600 வங்கிக் கணக்குகளைப் பேணி வந்துள்ளார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கூறியதாவது :

புலிகள் இயக்கத்தின் சர்வதேச தொடர்பாளர் கே.பிக்குச் சொந்தமாக ஐந்து கப்பல்கள் உள்ளன என்று பாதுகாப்பு தரப்பினரால் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அந்த கப்பல்களில் மூன்று சர்வதேச கடற்பரப்பிலிருந்து இலங்கையை நோக்கி கொண்டுவரப்படுகின்றன. சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த கப்பல்கள் எடுத்து வரப்படும் அதேவேளை கே.பி.க்குச் சொந்தமான ஏனைய இரண்டு கப்பல்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை கே.பி.யினால் சர்வதேச ரீதியில் பேணப்பட்டு வந்த சுமார் 600 வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் அவற்றில் உள்ள பணத்தை அரச உடமையாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் சொத்துக்கள் உடமைகளையும் அரச உடைமையாக்கிக் கொள்வதற்கான சர்வதேச ரீதியிலான சட்ட ஆலோசனைகள் தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. உரிய நடைமுறைகளின் பிரகாரம் அவை வெகு விரைவில் அரச உடைமைகளாக்கப்படும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.