Sunday, November 22, 2009

உலகிற்கு ஏற்றவாறு இலட்சியத்தை மாற்ற முடியாது


33 வருடகால தேசிய இன விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டதால், வரலாற்றுத் தவறாக அது மாறிவிடாது. ஒரு போராட்ட வடிவம் சிதைக்கப்பட்டதால், போராடுவதற்குக் காரணியாக அமைந்த அடிப்படைகள் அழிந்து போகாது.

நீண்ட வரலாற்றுப் பாராம்பரியம் மிக்க வட- கிழக்கு தமிழர் தேசம், சிறீலங்காவின் சிங்களதேசியத்தோடு முரண்பட்டு, மோதிவரும் போக்கு 1948 இல் இருந்து தொடர்கிறது. 56 இல் தனிச் சிங்கள சட்டத்தை நிறைவேற்றி, 58இல் தமிழ் மக்கள் மீது பேரினவாத வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்டது. 70 க்கு முன்பாக, தமிழர் தரப்பால் கைச்சாத்திடப்பட்ட பண்டா-செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்களை சிங்களம் கிழித்தெறிந்தது. பூர்வீக தமிழ் தேசிய இனத்தின் பிரிக்கமுடியாத இறைமை குறித்து சிங்கள ஆட்சியாளர் பேச மறுத்தார்கள். 72ல் உருவாக்கப்பட்ட புதிய குடியரசு அரசியல் யாப்பு, முழு இலங்கையின் இறைமையும், ஆட்சியதிகாரமும் சிங்கள இனத்திற்கு மட்டுமே சொந்தமானதென மிகத் தெளிவாக முன்வைத்தது.

இதனை மறுதலித்த தமிழ் தேசியச் சக்திகள், மறுபடியும் தமது தாயக இறைமையை வலியுறுத்த, 1976 இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தினுடாக சுதந்திர இறைமையுள்ள தமிழீழத் தனியரசே ஒரு தீர்வென உறுதிபடக் கூறின. இதற்குப் பதிலடியாக, 58 பாணியில், அதியுச்ச அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமையினையும், இனப்படுகொலைகளையும் 77 இல் சிங்களம் மேற்கொண்டது. இன ஒடுக்குமுறையும், அதை வலுப்படுத்தும் சட்டங்களும், இறைமையுள்ள சுயநிர்ணய உரிமை கோரும் தமிழர்களின் போராட்டத்தை, நசுக்கி விடுமென்பதே சிங்களத்தின் செயற்பாடாக இருக்கிறது. 76பின் பின்னர் வளர்ச்சியுள்ள ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை எதிர்கொண்ட சிங்களம், 83 இல் பாரிய இனப்படுகொலையை நிகழ்த்தி, பிரிவினைக்கு எதிரான 6வது திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்றியது.

சிங்கள தேசத்தின் வழமையான எதிர்வினைச் செயற்பாடுகளுக்கு முகங்கொடுத்த தமிழர் போராட்டம், திம்பு பேச்சுவார்த்தையில் தனது இறைமைக்கோட் பாட்டை மறுபடியும் முன்வைத்தது. பிராந்திய நலன்பேண இடையில் புகுந்த இந்திய தேசம், இறைமையுள்ள சுதந்திர தமிழீழக் கோட் பாட்டைக் கைவிட்டு, சிங்கள தேச இறையாண்மைக்குள் கரைந்து, மாகாண சபைத் தீர்வினை ஏற்கும்படி தமிழர் தரப்பினை நிர்ப்பந்தித்தது. இலங்கை முழுவதும், பேரினவாதச் சிங்கள இறையாண்மைக்கு உட்பட்டது என்பதை, முதலில் அங்கீகரித்த நாடாக இந்தியா இருப்பதனை நோக்க வேண்டும். இருப்பினும் பிறப்புரிமையான தமிழீழ தேசக் கோட்பாட்டை தமிழீழவிடுதலைப்புலிகள், இந்திய நிர்ப்பந்தத்திற்காக விட்டுக்கொடுக்கவில்லை.

சிங்களம் வலிந்து திணிக்கும் பேரினவாத ஆளுமையை, இந்தியாவும் தமிழர் மீது சுமத்த முற்பட்ட வேளையில், அமைதிப்படையானது சிங்கள தேசத்தின் இன்னுமொரு ஆக்கிரமிப்பு முகமாக மாறியது. ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சி, நிலப்பிரதேசங்களை நீட்டி, அங்கீகரிக்கப்படாத அரசு உருவாக்கத்தை நோக்கி விரிந்து செல்கையில், மேற்குலகின் தலையீட்டால் 2002இல் இரணில்-பிரபா ஒப்பந்தம் உருவானது. சர்வதேச அங்கீகாரத்திற்கான ஒரு பெருந்தளமாக, இவ்வொப்பந்தம் மாறுதலடையும் என விடுதலைப்புலிகள் கணிப்பிட்டார்கள். அடித்துப் பணிய வைக்கும் சிங்களத்தின் உத்திகள், விடுதலைப் புலிகளின் படைத்துறை வளர்ச்சியினால் செயல் இழந்துபோயின.

உலக நாடுகள் பலவும், பயங்கரவாதம என்கிற போர்வையில், தமிழீழதேச உருவாக்கத்தை நோக்கிய போராட்டத்தை மூடி மறைத்தார்கள். மகிந்தரின் வரவும், இந்தியாவின் பேராதரவும் இணைந்து ஆயுதப்போராட்டத்தை அழிப்பதற்காக கூட்டுச் சேர்ந்தியங்கின. பிரிவினையை நோக்கிய விடுதலைப் போராட்டம், தென்னாசியாவின் இராஜதந்திர, படைவலுச் சமநிலையைச் சீர்குலைத்து விடுமென ஊகித்த சகல வல்லரசாளர்களும், ஐக்கிய இலங்கை என்கிற சிங்கள தேசத்தின் இறைமையைக் காப்பாற்ற ஓடி வந்தார்கள்.இந்த ஒற்றுமை முள்ளிவாய்க்கால்வரை நீடித்தது. இன்று மனித உரிமைமீறல், போர்குற்றம் தொடர்பான அச்சுறுத்தல்களை சிங்களத்தின் மீது தொடுத்து, தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட மேற்குலகம் முயற்சிக்கிறது.

இருப்பினும் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த ஆயுதப்போராட்டம், தமது இறைமையுள்ள தமிழீழ அரசுக் கோட்பாட்டை எவரிடமும் அடகுவைக்கவில்லை. அத்தோடு கொள்கையை விட்டுக்கொடுத்து சரணாகதி அடையவுமில்லை. அதேவேளை ஆயுதப்போராட்டத்தை அழிப்பதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நின்று உதவி புரிந்தவர்கள் இன்று வெளிச்சத்திற்கு வருகிறார்கள். ஜி.எஸ்.பீ பிளஸ், போர்குற்ற விசாரணை போன்ற அச்சுறுத்தல்ளை விடுக்கும் மேற்குலகை நோக்கி, "நீங்கள் செய்த உதவியால்தான் விடுதலைப்புலிகளின் எட்டு ஆயுதக்கப்பல்களை அழித்தேன்' என மகிந்தர் கூறுகின்றார். அழிப்பதற்கு உதவிசெய்துவிட்டு, விசாரணைக்காக வருவது தவறானது என்பதே மகிந்தரின் வாதம்.

விமானத்திலிருந்து துல்லியமாக இலக்குத்தவறாமல் குண்டுவீசி, மக்களையும், போராளிகளையும் கொல்ல உதவி புரிந்த, அண்டைய நாட்டின் விமானப்படைத் தளபதியும் இலங்கைக்கு வருகின்றார். இவைதவிர, எதிர்கட்சித் தலைவி ஆங்சாங் சூகியை சிறையிலடைத்து, புதிய ஜனநாயக ஆட்சி புரியும் மியன்மார் இராணுவ ஆட்சியாளரும், மகிந்தரை தூக்கி நிமிர்த்த கொழும்பு வருகிறார். விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் வெளியக சுயநிர்ணய உரிமைக் கோட் பாட்டையும் அழித்திட உதவி புரிபவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக வருவார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நிர்மூலமாக்க எத்தனை சக்திகள் ஒன்று திரண்டு, தமக்குள் வேறுபாடுகள் இருந்தும், சேர்ந்து செயற்பட்டதை நோக்க வேண்டும்.

உலக மாற்றத்தை புரிந்து கொள்ளாமல், தேசியத்தலைவர் பிரபாகரன், ஆயதப்போராட்டத்தை நீட்டிச் சென்று விட்டாரென புதிய அரசியல் வியாக்கியானங்களை அள்ளி வீசுபவர்கள், இந்தியாவும் ஏனைய வல்லரசாளர்களும் சிங்களத்தின் பரிபூரண இறைமையைக் காப்பாற்ற ஏன் முயற்சி செய்தார்கள் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். யுத்தத்தின் இறுதிக் காலத்தில் வரகா, விக்ரகா என்கிற கரையோர காவல் படைப்பிரிவிற்குச் சொந்தமான இரண்டு யுத்தக் கப்பல்களை இந்தியா, மகிந்தருக்கு வழங்கியிருந்தது. கரையோரத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது இக்கப்பலில் இருந்து எறிகணை வீச்சுக்கள் நிகழ்த்தப்பட்டன.அத்தோடு நாளொன்றுக்கு 5000 எறிகணைகளை ஏவுவதற்கு சீனா கொடுத்த அன்பளிப்புக்களும் இறுதிப்போரைத் தீர்மானித்தது.

ஆகவே தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் வெளியிட்ட தமிழீழப் பிரகடனமும், முள்ளிவாய்க்கால்வரை அந்த இலட்சியத்தை காவிச்சென்ற தேசியத் தலைவரும், சுதந்திர இறைமையுள்ள தமிழீழ தனியரசு என்கிற கோட்பாட்டை எவர் காலடியிலும் சரணாகதி அடையச் செய்யவில்லை. இனி அடுத்த கட்டமாக, இப்போராட்டத்தை முன்னகர்த்திச் செல்ல முனைபவர்கள், அதிலிருந்து வழுவி, சிங்கள இறையாண்மைக்குள் சமரசம் காணும் அல்லது குனிந்து செல்லும் பாதையைத் தேர்ந்தெடுப்பார்களாயின், அவர்களை ஏற்றுக்கொள்வதா இல்லையாவென்பதை மக்களே தீர்மானிப்பார்கள். ஐக்கிய இலங்கைக்குள் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தாவிற்கும் மக்களே பதில் அளிப்பார்கள்.

-இதயச்சந்திரன்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.