Tuesday, November 24, 2009

ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவோம் : அனுரகுமார திசாநாயக்க

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து இறக்குவது மட்டுமல்லாது, அவரை வீட்டுக்கு அனுப்பிவைப்பதே ஜே.வி. பி.யின் குறிக்கோளாகும். இதனை மையமாகக் கொண்டே பொது வேட்பாளர் தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. மாறாக, கூட்டுக் கட்சிப் பேச்சு என்பதற்கு இடமில்லை" என்று அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

"எதிர்க்கட்சிகளின் ராஜதந்திர அரசியல் நகர்வுகள் அரசாங்கத்தை ஆட்டம் காணச் செய்துள்ளன. பீதியில் குழம்பிப் போயிருக்கும் ஆளும் தரப்பினர் வன்முறைகளினூடாக எதிர்க்கட்சிகளை நசுக்கிவிடலாம் என்று எண்ணுகின்றன. அரசாங்கத்தின் பகற்கனவு பலிக்கப் போவதில்லை" என்றும் அவர் சொன்னார்.

ஜனாதிபதித் தேர்தல், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அனுரகுமார திசாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

"ஜே.வி.பி.யானது நிலையான கொள்கையுடன் செயற்பட்டு வருகின்ற கட்சியாகும். அத்துடன் நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்களைவிட்டுக் கொடுப்பதற்குத் தயாரில்லை.

அரசாங்கத்தின் பயணமானது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். நிறைவேற்று அதிகாரம் என்ற ஆயுதம் மக்கள் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதை தொடர்ந்தும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டில் ஜனநாயகத்துடனான நல்லாட்சி மலர வேண்டுமானால் நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

அதற்கு முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் விரட்டியடிக்கப்பட வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையே தற்போது அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்தில் இருந்து இறக்குவதாகும்.

ஐ.தே.முவினதும் ஜே.வி.பியினதும் நோக்கம் ஒன்றே

அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கும் பட்சத்தில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே எதிர்க்கட்சிகளின் பிரதான நோக்கமாகும். ஐக்கிய தேசியக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் நோக்கமும் ஜே.வி.பி. யின் நோக்கமும் ஒன்றேயாகும். இது தொடர்பிலான பேச்சுக்களே இடம்பெற்று வருகின்றன.

கூட்டு சேருவதற்கான பேச்சுக்கள் எதனையும் ஜே.வி.பி. மேற்கொள்ளவில்லை அப்படியொரு தேவையும் எமக்கில்லை.

நாம் ஜே.வி.பி.யாகவே செயற்பட விரும்புகிறோமே தவிர ஹெல உறுமயவாக செயற்பட விரும்பவில்லை. எதிர்க்கட்சிகளின் அரசியல் நகர்வுகள் பாரிய சக்தியாக உருவெடுத்து வருவதனால் அரசாங்கம் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றது.

இதனால் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்ற எம்மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. மக்களிடம் செல்வதற்கு அரசாங்கத்திடம் திராணியிருக்குமானால் ஏன் இப்படி அச்சம் கொள்ள வேண்டும் எனக் கேட்க விரும்புகிறேன்.

ஊடகங்கள் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கான காரணம் என்ன இருக்கின்றது? அதிகாரம் கையில் இருக்கின்றது என்பதால் ஆட்சியாளர்கள் அப்பட்டமான முறையில் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

தேர்தல் காலங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் பயங்கரமானவை என்பது கடந்த காலங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது தேர்தல் ஒன்று அறிவிக்கும் முன்னரே எம்மீது தாக்குதல் நடத்துவதானது அரசாங்கத்தின் அச்சத்தையும் இயலாமையையும் வெளிப்படுத்தியுள்ளமை தெளிவாகின்றது" என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.