அமைச்சர்கள் மட்டத்திலான ஆசிய கூட்டுறவு கலந்துரையாடல் பண்டாரநாயக்க நினைவு அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமானது. அரச தலைவர் அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
"இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீளக்குடியமர்த்தும் பணிகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கண்ணிவெடிகளை அகற்றும் பணி எமது முழுமையான கவனத்தையும் பெற்றுள்ளது. ஆனால், முன்னர் எதிர்பார்க்கப்பட்டதைவிட அப்பணிகள் குறிப்பிடத்தக்களவு சிக்கலானவையாக இருக்கின்றன” என்றார் மகிந்த ராஜபக்ச.
கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை ‘மிகுந்த கவனத்துடனும் நிதானத்துடனுமே” மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களை அவர்கள் தற்போது தங்கி இருக்கும் முகாம்களில் இருந்து எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக மீளக்குடியமர்த்துவதே அரசின் மிக முக்கிய பணி. ஆனால் மீள்குடியமர்வு விவகாரம் மிகக் கவனத்துடன் அணுகப்பட வேண்டும்.
விவசாயம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கு மக்கள் பயன்படுத்திய அல்லது அவர்கள் வாழ்ந்த இடங்களில் பெரும் பகுதியில் விடுதலைப் புலிகளால் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.
அந்தக் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். மிகக் கவனத்துடனும் நிதானத்துடனும், ஒரு சின்னத் தவறுகூட நடக்காமல் அதனைச் செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்.
நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஜனநாயகம் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. அங்கு ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறை எனது அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியது என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்.
வடக்கு, கிழக்கு இரண்டு மாகாணங்களிலுமே எனது அரசு தேர்தல்களை நடத்தி உள்ளது. முன்னாள் ஆயுததாரிகள் ஜனநாயக நடவடிக்கைகளிற்குத் திரும்பி உள்ளனர். துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பதிலாக அவர்கள் வாக்குச் சீட்டுக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளார்கள். அத்துடன் மாகாண சபைகளிலும் நாடாளுமன்றிலும் அவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் ஏற்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். அத்துடன் மனித உரிமை நிலைமையை மேம்படுத்துவது தொடர்பிலும் செயற்பட்டு வருகின்றோம்.
அதேசமயம், தீவிரவாதத்தை நாம் தோற்கடித்திருப்பது அனைத்துலக சமூகத்திற்கு ஒரு ஊக்குவிப்பாக அமைந்திருக்கிறது. நட்பு நாடுகளின் உதவிகள் இருந்தபோதும் எமது சொந்த முயற்சியின் மூலமே இந்த வெற்றி கிடைத்தது.
இந்த நாட்டின் பிரச்சினைகள் அவற்றை நன்கு அறிந்திருப்பவர்களால் தான் தீர்க்கப்பட முடியும். அதாவது இந்த நாட்டு மக்களால்தான் அதற்குத் தீர்வு காண முடியும்.
இவ்வாறு மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.