Thursday, October 15, 2009

தமிழ்ச் சிறுவர்கள் நிலை அறிய பிரதிநிதியை அனுப்புகிறது ஐ.நா.

[வியாழக்கிழமை, 15 ஒக்ரோபர் 2009]

வன்னி வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தனது மற்றொரு பிரதிநிதியை ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்காவிற்கு அனுப்பி வைக்கிறது.

முகாம்களில் உள்ள சிறுவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வு காணுமாறு அரசுக்கு அழுத்தங்களை வழங்குவதற்காகவே ஐ.நா. பிரதிநிதி அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

ஐ.நா.வின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல் விவகாரங்கள் தொடர்பான பிரதிநிதி ராதிகா குமாரசாமியின் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் பற்றிக் கம்மேர்ட் விரைவில் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

ராதிகா குமாரசாமி இந்தத் தகவலைத் தெரிவித்தார் என ஐ.நா. இணையத் தளம் கூறுகின்றது.

ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய ராதிகா குமாரசுவாமி, முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் விதி குறித்துக் குரல் கொடுத்திருந்தார்.

கடந்த மே மாதம் போர் முடிவடைந்ததாக சிறிலங்கா அரசு அறிவித்ததில் இருந்து சுமார் ஐந்து மாதங்களுக்கு மேலாக அவர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

அதேசமயம், ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் பற்றிக் கம்மேர்ட் எதிர்வரும் நவம்பர் 8ஆம் நாள் முதல் 13 வரை சிறிலங்காவில் இருப்பார் என இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுடன் பேச்சு நடத்தியது குறித்து இன்னர்சிற்றி பிரஸ் ராதிகா குமாரசாமியிடம் வினா எழுப்பியது.

பதிலளித்த அவர், அந்தச் சந்திப்பு பெரிதும் சம்பிரதாயபூர்வமானதாகவே இருந்ததாகக் குறிப்பிட்டார். எனினும் அந்தக் கூட்டத் தொடருக்கு வருகை தந்திருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம மற்றும் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் உத்தியோகபூர்வமான பேச்சுக்களைத் தான் நடத்தினார் எனவும் ராதிகா கூறினார்.

அந்தப் பேச்சுக்களின் போது இடம்பெயர்ந்த சிறுவர்களின் விடயமும் முக்கியமாக ஆராயப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் ‘நடமாட்ட சுதந்திரம் இன்றி” அடைத்து வைக்கப்பட்டிருப்பதும் முகாம்களும் அனைத்துலக சட்ட விதிகளை மீறும் செயல் என்றும் ராதிகா குமாரசாமி மேலும் கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.