தமது உயிர்களுக்குப் பாதுகாப்பளித்து அடைக்கலம் கொடுக்குமாறு இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி ஒருத்தி அதிகாரிகளிடம் கெஞ்சிய மனதை உருக்கும் சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு படகில் சென்று கொண்டிருந்த சமயம் இந்தோனேசிய கடற்படை அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த 260 பேரில் இந்தச் சிறுமியும் ஒருவர்.
பிருந்தா என்ற அந்த 9 வயதுச் சிறுமி தமது உயிரைப் பாதுகாக்குமாறு இந்தோசிய அதிகாரிகளிடம் மன்றாடும் காட்சிகள் அடங்கிய காணொலி அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகியது.
‘தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள், எங்கள் உயிர்களைப் பாதுகாக்க உதவுங்கள். நாங்கள் உங்கள் குழந்தைகள். தயவுசெய்து எங்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள். தயவுகாட்டுங்கள்.... தயவுகாட்டுங்கள்....” என அந்தச் சிறுமி அதிகாரிகளிடம் கெஞ்சினாள்.
‘தயவுசெய்து எங்களை ஏதாவது ஒரு நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள். அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பாவிட்டால் பரவாயில்லை, வேறு எந்த நாட்டுக்காவது கொண்டு சென்று விடுங்கள். நாங்கள் சிறிலங்காவில் வாழ முடியாது” என அந்தச் சிறுமி மேலும் மன்றாடும் காட்சிகள் அந்தக் காணொலியில் பதிவாகி உள்ளன.
அவர்கள் வந்த படகில் 260 பேரும் மிக நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்ததை காணொலிக் காட்சிகள் காட்டுகின்றன. அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு வழங்கிய துப்புத் தகவலை அடுத்து கடந்த ஞாயிறன்று படகை இந்தோனேசிய அதிகாரிகள் வழிமறித்துக் கைப்பற்றினர்.
படகில் வந்தவர்களின் உத்தியோகபூர்வமற்ற பேச்சாளரான அலெக்ஸ் என்பவர், தங்களை இந்தோனேசிய அதிகாரிகள் தடுத்து வைக்க முயன்றால் படகிற்கு தீ மூட்டி விடப்போவதாக முன்னர் மிரட்டி இருந்தார். ஆனால் பின்னர் அதனை அவர் கைவிட்டார்.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் சிறிலங்காவில் தமிழர்கள் வாழ்வதற்கு ஆபத்தானதாக மாறி இருப்பதாலேயே இந்த 260 பேரும் அரசியல் அடைக்கலம் கோரி அவுஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார் அலெக்ஸ்.
‘அந்த மாதிரியான ஒரு சூழ்நிலைக்குள் சிக்கித் தவிப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை. அனைத்துலக சமூகம் ஒன்றிணைந்து எமது பிரச்சினை குறித்து ஒரு முடிவெடுத்து இந்த நாட்டில் இருந்து எம்மை வெளியேற்ற ஒரு வழியைக் கண்டறியும் வரை நாங்கள் இந்தப் படகிலேயே தங்கி இருக்கப் போகின்றோம்” என்றார் அவர்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.