Monday, October 05, 2009

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்புணர்ச்சி, பாலியல் துன்புறுத்தல் முன்னர் நடந்துள்ளது: அமெரிக்கா

[திங்கட்கிழமை, 05 ஒக்ரோபர் 2009]

இலங்கையில் அரச படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு எதிராக குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்புணர்ச்சிகளும் துன்புறுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கான விபரங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போரில் பாலியல் வன்முறை ஓர் ஆயுதமாக இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் கிலறி கிளின்ரன் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் தெரிவித்திருந்தார். அதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த சிறிலங்கா, கிலறியின் கருத்தை அவர் மீளப் பெற வேண்டும் என்றும் கேட்டிருந்தது.

சிறிலங்காவின் கண்டனத்திற்குப் பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

சிறிலங்காப் படையினரின் காவலில் இருந்த பெண்களுக்கு எதிராக பாலியல் வன்புணர்ச்சிகளும் துன்புறுத்தல்களும் இடம்பெற்றன என்பது தொடர்பான தகவல்கள் தம்மிடமும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளிடமும் இருக்கின்றன என அமெரிக்க அரசின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அண்மைக்காலத்தில் அவ்வாறான குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையும் தம்மிடம் இல்லை எனவும் அந்தக் கடிதத்தில் அமெரிக்கா கூறி உள்ளது.

அதேசமயம், இலங்கையில் இடம்பெற்றுவரும் நீதிக்குப் புறம்பான கொலைகள், காணாமற் போதல்கள், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மீதான துன்புறுத்தல்கள் என்பன குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவனம் செலுத்தி வருவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகப் பெண்கள் பிரச்சினைகளுக்கான தூதுவர் மெலானே வெர்வீர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

"2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற அண்மைய மோதல்களின் போது பாலியல் வன்புணர்ச்சிகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் போரில் ஓர் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டன என்பதற்கான அறிக்கைகள் எவையும் எமக்குக் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் உலகின் மோதல் நடைபெறும் ஏனைய இடங்களில் இருந்து அத்தகைய அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன" என்று கடிதம் கூறுகின்றது.

"இந்த விளக்கம், இந்தச் பிரச்சினையை அதன் சரியான பரிமாணத்தில் கொண்டு செல்லும்" எனத் தான் கருதுவதாக மெலானே வெர்வீர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"இலங்கை அமைதியை நோக்கியும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கியும் முன்னேற வேண்டும் என்றும் எதிர்காலத்தை நோக்கித் தன் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கிலறி கிளின்ரன் எதிர்பார்க்கிறார்" எனவும் கடிதம் தெரிவிக்கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.