வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை நீண்ட காலமாக தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை சிறிலங்காவிற்கு இந்திய அரசு வெளிப்படுத்தி உள்ளது. அத்துடன், மீள்குடியமர்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும்படியும் அது அரசைத் தூண்டி உள்ளது.
புதுடில்லியின் கவலைகள் இரு வெவ்வேறு வழிகளில் கொழும்புக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.
சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் இந்த வார தொடக்கத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசி உள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் பணிகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் விடுத்த கோரிக்கையை மகிந்தவிடம் அலோக் பிரசாத் எடுத்துக் கூறினார்.
மக்களின் மீள்குடியமர்வு தாமதம் இன்றி விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் சிறிலங்காவிற்கு "இறுக்கமாகத்" தெரிவித்திருக்கிறார் என இந்திய ஊடகங்கள் இந்த வாரத்தில் தெரிவித்திருந்தன.
மற்றொரு வழியிலும் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்புச் செயலாளர் எம்.கே.நாராயணன் சிறிலங்கா அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்தியாவின் கவலைகள் பற்றி அவரும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் தடுத்து வைத்திருப்பது இந்தப் பிராந்தியத்தின் உறுதித் தன்மைக்குப் பாதமாக அமையும் என நாராயணன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார் என்று இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த விவகாரங்கள் குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஆனால், அங்கு எப்படி விவாதிக்கப்பட்டது அல்லது என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்ற விபரங்கள் வெளிவரவில்லை.
தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் வழக்கமாகக் கலந்துகொள்பவர்களுக்கு மேலாக, அரச தலைவரின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ச மற்றும் வடக்கு - கிழக்கில் உள்ள பிராந்திய படைகளின் தளபதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பொதுச் செயலாளர் லைன் பாஸ்கோவே கொழும்புக்கு வந்திருந்த சமயம் இந்தியாவின் கவலைகளுக்கான பதிலை அரச தலைவர் வெளிப்படுத்தியிருந்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள், இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீளக்குடியமர்த்தி விடுவதாக அவர் ஐ.நா.விற்கு உறுதி அளித்திருந்தார். முன்னதாக ஆறு மாத காலத்திற்குள் மீள்குடியமர்வுப் பணிகள் முடிக்கப்படும் என இந்தியாவிற்கு அரச தலைவர் உறுதி கூறியிருந்தார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.