மேற்குலக நாடுகளுக்கு சிறிலங்காப் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஏற்றுமதி வரிச் சலுகையை (ஜி.எஸ்.பி. பிளஸ்) நீக்க வேண்டாம் என்று கொழும்பு கத்தோலிக்க பேராயர் மல்கொல்ம் றஞ்சித் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளானர்.
வரிச் சலுகையை நீக்குவது தமிழ் மக்களின் மீள்குடியமர்வுக்கு உதவாது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு-கிழக்கில் உள்ள நகரங்கள், கிராமங்களில் பொருளாதார உறுதித் தன்மையை பேணும் வகையில் மேற்கொள்ளப்படும் பரந்தளவிலான கட்டுமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அது பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேற்றிராணியார் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
"உங்களின் நட்புணர்வை அனுபவிப்பதற்கே நாங்கள் விரும்புகின்றோம்" என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவடைந்ததன் பின்னரான காலத்தில் சிறிலங்கா அரசு எதிர்கொண்ட அனுபவங்களை வெளிநாட்டு நண்பர்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் பேராயர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
"மனித சுயநலங்களால் எமது நாடு பெரும் துன்பங்களை அனுபவித்துள்ளது. இந்த நாட்டில் ஒருவர் இன்று துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அதற்குப் பிரிவினைவாதிகளாலும் தனிநபர்களின் போக்குகளாலும் நீண்ட காலமாகத் தொடர்ந்த பிணக்குகளே காரணம். இது காயங்கள் ஆற்றப்படுவதற்கான காலம். அதனை வெளியிருந்து எவரும் உந்தித் தள்ளாமலேயே சிறிலங்கா மக்கள் செயற்படுத்துவதற்கான தகுதி அவர்களிடம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் கொழும்பு பேராயர்.
மனித உரிமைகள் தொடர்பிலும், இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலும் கவனமும் அக்கறையும் செலுத்தப்பட வேண்டியது அவசியம்தான். ஆனாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது மக்களின் மதிப்பு மற்றும் உரிமைகள் குறித்துக் கவனம் செலுத்தும் வகையில் பொறுப்புணர்வையும் ஒற்றுமையையும் நாம் வளர்த்துக் கொள்வதற்கு உதவி செய்வதே மேற்கு நாடுகளாக இருந்தாலும் சரி கிழக்கு நாடுகளாக இருந்தாலும் சரி நட்பு நாடுகள் என்ற வகையில் எடுக்கக் கூடிய சிறப்பான அணுகுமுறையாக இருக்க முடியும் எனவும் பேராயர் மல்கொல்ம் றஞ்சித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.