ஈழத் தமிழர்கள் மீதான அவலங்கள் நீடித்தால் இலங்கையில் தொழில் முதலீடு செய்யமாட்டோம் என்று இந்திய மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
இது தொடர்பாக மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலக தமிழர்களின் ஓர் அங்கமான ஈழத் தமிழர்களின் அவலங்கள் அங்கே போர் முடிந்ததற்கு பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இன அழிப்பு போரில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று ஒழிக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டவர்களாக முட்கம்பி வேலிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சிறுகச் சிறுக கொல்லப்பட்டு வருகிறார்கள். அங்கிருந்து சிறை முகாம்களுக்கு மாற்றப்பட்டவர்களும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர்.
மனித உரிமைகள் குறித்தும், இன விடுதலை குறித்தும் உரக்க பேசுகின்ற நாடுகளும், அமைப்புக்களும் ஈழத் தமிழர்கள் விடயத்தில் மட்டும் அமைதி காக்கின்றன.
அண்டை நாடான இந்தியாவும், இந்தியாவில் உள்ள தமிழர்களும் இந்த அவலங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.
சிங்களப் பேரினவாத அரசின் தமிழின அழிப்புப் போரை தடுத்து நிறுத்துவதற்குத்தான் முடியவில்லை. இப்போது அங்கே போர் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போருக்குப் பின்னால் தொடர்கின்ற அவலங்களையாவது தடுத்து நிறுத்துவதற்கு முன்வாருங்கள் என்று உலகெங்கும் பரவிக் கிடக்கிற தமிழர்கள் ஏங்கி நிற்கிறார்கள்.
எங்கேயாவது மனித குலம் துன்புற்றால் துடித்துப்போகிற கிறிஸ்தவர்கள், இப்போது இதற்கு வழி காட்டியிருக்கிறார்கள்.
இலங்கையில் வதை முகாம்களில் ஆடு, மாடுகளைப் போன்று அடைத்து அடக்கி ஒடுக்கப்பட்டு வரும், ஈழத் தமிழர்கள் உடனடியாக அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றி தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களின் அவலங்களை துடைக்க குரல் கொடுக்க முன்வரவேண்டும்.
மனித உரிமைகளுக்கு எதிராக முகாம்களில் அடைத்து வதைக்கப்பட்டு வருகிற 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை, விடுதலை செய்து சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் இந்தியா கண்டிப்பான குரலில் எச்சரிக்க வேண்டும் என்று, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலையில் வலியுறுத்த வேண்டும்.
இந்திய அரசோ அல்லது இந்திய தொழில் நிறுவனங்களோ இலங்கையில் எத்தகைய தொழில் முதலீடுகளும் செய்யமாட்டோம் என்று அறிவிக்க செய்ய வேண்டும்.
இந்திய அரசு இப்படியெல்லாம் செயற்படுவதற்கு எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இந்த கடமையை அவசர கதியில் செயற்பட முன்வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.