Tuesday, September 22, 2009

தமிழ் மக்கள் உண்மை நிலை அறிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை அனுப்பும்படி மன்மோகன், சோனியாவுக்கு அழுத்தம்

[செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2009]


இலங்கையில் தமிழ் மக்களின் நிலைமைகளைப் பார்வையிட்டு வர தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அங்கு அனுப்பி வைக்குமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநில அமைச்சர்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடமும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

படையினரால் கட்டுப்படுத்தப்படும் இந்த தடுப்பு முகாம்களில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று தமிழ்நாட்டுக் குழு இந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தி உள்ளது.

குழுவில் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர்.

பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து இலங்கை தமிழ் மக்கள் படும் துயரங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்ததாக முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ரி.ஆர்.பாலு தெரிவித்தார்.

"சிறிலங்கா படைத்துறை அதிகாரிகளால் தமிழ் மக்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று நாம் எடுத்துக் கூறினோம். இடம்பெயர்ந்த மக்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம்" என்றார் ரி.ஆர்.பாலு.

"அகதி முகாம்களுக்குள் தமிழ் மக்கள் இக்கட்டுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பிரதமரிடம் எடுத்துச் சொன்னோம். 2 ஆயிரம் மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தமது இடங்களைச் சென்றடையவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எமக்குத் தெரிய வேண்டும்" என பாலு மேலும் கூறினார்.

இலங்கையில் உள்ள நிலைமைகளை மதிப்பிடுவதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்திய மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டு குழு வலியுறுத்தி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம், தொடர்பாடல் துறை அமைச்சர் ஏ.ராசா, ஆடைத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நாடாளுமன்றத்தின் கீழ் சபை உறுப்பினரும் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, தமிழ்நாடு மாநில அமைச்சர்கள் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், எஸ்.காந்திசெல்வன், எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் தமிழ்நாட்டுக் குழுவில் உள்ளடங்கி இருந்தனர்.

இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் தாங்க முடியாத துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வேண்டிய போதியளவு இராஜதந்திர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முதல்வர் மு.கருணாநிதி வலியுறுத்தி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசுக்கு இரண்டாவது முறையாக இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருடனான சந்திப்பின்போது தமிழ்நாட்டு குழு வலியுறுத்தி உள்ளது.

1 comment:

  1. உங்கள் செய்திக்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது

    நன்றி

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.