Wednesday, September 23, 2009

கடன் வாங்கி அந்நியச் செலாவணி இருப்பை சிறிலங்கா அதிகரிப்பதற்கு அனைத்துலக நாணய நிதியம் எதிர்ப்பு

[புதன்கிழமை, 23 செப்ரெம்பர் 2009]

தனது அன்னியச் செலவாணி இருப்பை அதிகரிப்பதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து சிறிலங்கா அரசு கடன் பெறுவதற்கு அனைத்துலக நாணய நிதியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு எப்போதும் இல்லாத வகையில் 4 பில்லியன் டொலர்களை எட்டி உள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி இந்த மாதம் அறிவித்திருந்தது. நான்கு மாதங்களுக்கான இறக்குமதியை மேற்கொள்வதற்குப் போதுமான தொகை இது எனவும் வங்கி தெரிவித்திருந்தது.

திறைசேரி முறிகள் மற்றும் கடன் பத்திரங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கியதன் மூலமும் டொலருக்கு நிகரான கடன் பத்திரங்களை அரசு விற்பனை செய்ததன் மூலமும் அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்ததாக மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இதன் மூலம் 1.2 பில்லியன் ரூபா அரசுக்கு பணமாகக் கிடைத்ததாக மத்திய வங்கி ஆளுநர் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

ஆனால், வருமானம் மூலமாக இல்லாமல் இப்படிக் கடன் பெற்று அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிப்பதற்கு எதிராக சிறிலங்கா அரசை அனைத்துலக நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

"அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிப்பதற்காக சிறிலங்கா அரசு கடன் வாங்குவதை நாம் விரும்பவில்லை" என்றார் பிரெய்ன் அட்கன். அனைத்துலக நாணய நிதியத்தின் சிறிலங்காவுக்கான நடவடிக்கை தலைவர் இவர்.

நாட்டின் பொருளாதாரம் குறித்து இரண்டு வார மதிப்பீடு ஒன்றை மேற்கொண்ட பின்னர் அவர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது இதனைத் தெரிவித்தார்.

"கடன் வாங்குவதற்குப் பதிலாக சிறிலங்கா ஏற்றுமதி மூலமும் வருமானம் மூலமும் தனது அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிப்பதையே நாம் விரும்புகின்றோம்" என்றார் பிரெய்ன் அட்கன்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்கா அரசு மும்முரமாக நடத்திக்கொண்டிருந்த இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மிக மோசமான வீழ்ச்சியை எட்டியிருந்தது. ஒரு மாதத்திற்கு தேவையான இறக்குமதிச் செலவை ஈடுகட்டக்கூடிய அளவிலேயே அது இருந்தது.

அதன் பின்னர், அனைத்துலக நாணய நிதியம் சிறிலங்காவுக்கு வழங்கிய 2.6 பில்லியன் கடன் தொகையில் முதல் கட்டமான 322.2 மில்லியன் டொலர் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு உயர்த்தப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறிலங்கா அரசுக்கு இருந்த மோசமான அந்நியச் செலாவணி இருப்பு நிலை அதனை அனைத்துலக நாணய நிதியத்திடம் கையேந்தும் நிலைக்குக் கொண்டு சென்றது.

சிறிலங்கா அரசின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரிக்கும் விதத்தில் நீண்ட காலக் கடன் பத்திரங்களைக் கொள்முதல் செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வந்ததை வரவேற்ற அனைத்துலக நாணய நிதிய அதிகாரி, நிதியத்தின் இரண்டாவது கட்டக்கடன் தொகை அதன் பணிப்பாளர் சபை அனுமதி கிடைத்ததும் ஒக்ரோபர் மாதத்தில் சிறிலங்காவிற்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.