Wednesday, September 23, 2009

தமிழர்களை உடன் மீளக்குடியமர்த்த உலகத் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை

[புதன்கிழமை, 23 செப்ரெம்பர் 2009]
சிறிலங்காப் படையினரால் கட்டுப்படுத்தப்படும் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போரால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்தும்மாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என உலக நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 64 ஆவது பொதுக் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் இன்று புதன்கிழமை இந்தக் கோரிக்கையை மனித உரிமைக் குழுக்கள் விடுத்துள்ளன.

இன்று தொடங்கும் ஐ.நா. பொதுக் கூட்டத் தொடரும் பிட்ஸ்பேர்க்கில் நடைபெற உள்ள ஜி-20 நாடுகளின் பொருளாதார மாநாடும், இலங்கையின் வடபகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் தமிழ் மக்களின் நெருக்கடி நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

"இந்த மக்களின் முழுமையான நடமாட்ட சுதந்திரத்தை அவர்களுக்கு மீண்டும் வழங்குமாறு ஐ.நா. விடுத்துள்ள அழைப்புக்கு உலக நாடுகளில் தலைவர்கள் தமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். போராலும் இடம்பெயர்வாலும் அளவுக்கு அதிகமான துன்பங்களை அந்த மக்கள் அனுபவித்து விட்டார்கள்" என மனித உரிமைகள் காப்பகத்தின் ஆசிய பிரிவு இயக்குநர் பிறட் அடம்ஸ் தெரிவித்தார்.

"தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு விடுதலைக்கான உரிமை இருக்கிறது. ஆனால், அரச படையினர் அங்கு சுற்றி இருக்கும்போது அந்த விடுதலை சாத்தியமற்றது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், முகாம்களில் மக்கள் எவ்வளவு காலம் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டிருப்பார்கள்? எப்போது அவர்களது வீடுகளுக்குச் செல்ல முடியும் என்பது தொடர்பில் சிறிலங்கா அதிகாரிகள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் எதனையும் கூறுவதில்லை எனக் குற்றம்சாட்டினார்.

அதேசமயத்தில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் செயற்திறனுடன் கவனம் செலுத்துவதில் ஐ.நா. மனித உரிமைகள் சபை தோல்வி அடைந்து விட்டது என கொங்ஹொங்கைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

"இது ஒன்றும் அரசியல் ரீதியான தோல்வி மட்டுமல்ல, அணுகுமுறை ரீதியாகவும் அது தோற்று விட்டது" எனவும் அக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.