Monday, September 14, 2009

சிறிலங்கா போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுகிறது அமெரிக்க அமைப்பு

[திங்கட்கிழமை, 14 செப்ரெம்பர் 2009,]

இறுதிப் போரின் போது சிறிலங்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அதனது அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் சண்டை நடைபெற்ற சமயத்தில் செய்மதிகள் ஊடாக எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' அமைப்பு சேகரித்து வருகின்றது.

அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களான சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் புரிந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கான சாட்சியங்களை 'இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு' தற்போது திரட்டி வருகின்றது. தமிழர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதற்கான சாட்சியங்களாக, போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18 ஆம் நாளுக்கு முன்னரும் பின்னருமான நாட்களில் செய்மதிகளில் இருந்து எடுக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்தப் போவதாக அந்த அமைப்புக் அறிவித்துள்ளது.

அதற்காகவே அத்தகைய படங்களைச் சேகரித்து வருவதாகவும் அது கூறியுள்ளது. பிரித்தானிய 'ரைம்ஸ்' நாளேடு, இந்தப் படங்களையும் அவை தொடர்பில் நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்களையும் வைத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் இறுதிப் போரில் உயிரிழந்தனர் எனக் குற்றம் சாட்டி இருந்தது. இது தொடர்பான மேலதிகப் பணிகளுக்காக நிபுணர்களையும் தொண்டர்களையும் 'இனப் படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு' ஒன்றிணைத்துள்ளது. அத்துடன், முன்னணி கல்வி நிறுவனங்கள் இரண்டைச் சேர்ந்த ஒளிப்பட ஆய்வு நிறுவனங்களையும் உதவிக்கு அழைத்துள்ளோம் என அமைப்பு தெரிவித்துள்ளது.

 தமது நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிறிலங்கா அரசால் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் இருந்த புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான ஆவணங்களும் உள்ளடக்கப்படுவதாக 'இனப் படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' அமைப்பு கூறியது. பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே இருந்த பல மருத்துவமனைகள் மீது படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியதற்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் இருப்பதாகவும் அமைப்பு தெரிவிக்கிறது.

இந்த ஆதாரங்கள் எல்லாம் அமெரிக்காவிலும் அனைத்துலக நீதி நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்ட வேறு நாடுகளிலும் போர்க் குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் என்று அமைப்பினர் தெரிவித்தனர். அமெரிக்கக் குடிமகன் அல்லது வெளிநாட்டுக் குடிமகன் ஒருவர் இனப்படுகொலை, சித்திரவதை, போர்க் குற்றங்களில் ஈடுபடின் அவர்களை அமெரிக்க குற்றவியல் சட்டப்படி அமெரிக்காவில் தண்டிக்க முடியும். சித்திரவதைகளுக்கு எதிரான சட்டங்களின் கீழ் நீதி விசாரணை அற்ற படுகொலைகள் தொடர்பாகவும் அமெரிக்க நீதிமன்றங்கள் தண்டனை விதிக்க முடியும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.