Monday, September 14, 2009

இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானும் பத்மநாதனை விசாரணை செய்யும்

[திங்கட்கிழமை, 14 செப்ரெம்பர் 2009] சிறிலங்கா அரசால் மலேசியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதனை ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) கேட்டுள்ள அதேநேரம் அவரைத் தாமும் விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தானும் கோரி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீது பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னணியில் புலிகளின் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்ததை அடுத்தே பத்மநாதனை விசாரணை செய்வதற்கு பாகிஸ்தானியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி அளித்திருக்கக்கூடும் என்ற தகவல் விசாரணையாளர்களுக்கு கிடைத்திருப்பதாக பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ராசா கிளானி அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த வாரம் லிபியாவில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து உரையாடியபோது சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் புலிகளின் பின்னணி இருந்ததற்கான சாத்தியங்கள் குறித்தும் பேசப்பட்டதாக கிளானி கூறியிருந்தார். இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக பாகிஸ்தான் தனது புலனாய்வாளர் குழு ஒன்றை விரைவில் கொழும்புக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, இந்திய புலனாய்வுத்துறையினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே ஓகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் சிறிலங்காப் புலனாய்வுத்துறையினர் பத்மநாதனை பிடித்தனர் என இந்தியாவில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திர கொலை வழக்கில், அவரைக் கொல்வதற்கான சதி முயற்சிகளில் ஈடுபட்டது, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கடத்தியது போன்ற குற்றச்சாட்டுக்கள் பத்மநாதன் மீது சுமத்தப்பட்டுள்ளன. பத்மநாதனை விசாரணை செய்வதன் மூலம், ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகளின் சதி இருக்கின்றது என அந்த வழக்கை விசாரணை செய்த ஜெயின் ஆணைக்குழு தெரிவித்த கருத்துக்களின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவரும் என இந்திய உள்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர். பத்மநாதனை விசாரணை செய்வதற்கும் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்குமான பணிகளுக்கென இந்திய மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக் குழுவிற்கு மேலும் ஒரு வருட கால நீடிப்பை உள்துறை அமைச்சு வழங்கி உள்ளது. பத்மநாதனை விசாரணை செய்வதற்கான இந்தியக் குழு இந்த மாதத்தில் கொழும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. i dont know what is going on and what is truth, in this matter. totaly this srilankan matters are so confusing.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.