வன்னியில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் இன்னும் நான்கு மாதங்களுக்குள் மீளக்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையிடம் மீண்டும் ஒருமுறை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருக்கின்றார்.
சிறிலங்காவிற்கு மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐ.நா.வின் அரசியல் பொதுச் செயலாளர் லைன் பாஸ்கோவே வெள்ளிக்கிழமை காலை மகிந்தவை சந்தித்துப் பேசினார்.
வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு நேற்று சென்ற பாஸ்கோவே அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டார். வடபகுதியில் இடம்பெற்றுவரும் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், முகாம்களின் நிலைமை மோசமாக இருக்கின்றது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை அவர் சந்தித்துப் பேசினார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் வழங்கிய கடிதத்தையும் அவர் மகிந்தவிடம் கையளித்தார்.
இடம்பெயர்ந்த மக்கள் நடத்தப்படும் விதம் தொடர்பாக அனைத்துலக சமூகம் கொண்டுள்ள கவலை குறித்து அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்று வாசிங்ரனில் தெரிவித்திருந்தார்.
"கடந்த திங்கட்கிழமை இந்த விடயங்கள் குறித்து மகிந்த ராஜபக்சவுடன் நான் நேரடியாகத் தொலைபேசியில் பேசி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக ஐ.நா.வின் அரசியல் பொதுச் செயலாளர் லைன் பாஸ்கோவேவை அங்கு அனுப்பி இருக்கிறேன். அனைத்துலக சமூகம் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாகக் கவலைகள் குறித்துதம் தெரிவிக்கும் எனது கடிதத்தை மகிந்தவிடம் கையளிக்குமாறும் விரைவில் எனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பாஸ்கோவேவிடம் நான் கேட்டிருக்கின்றேன்" என்றார் பொதுச் செயலாளர்.
இன்றைய சந்திப்பின்போது எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் தமிழ் மக்கள் அனைவரையும் மீளக்குடியமர்த்திவிட முடியும் என்று தான் எதிர்பார்க்கிறார் எனவும் ஏற்கனவே உறுதியளித்தபடி 180 நாட்களுக்குள் குறைந்தது 70 விழுக்காடு மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் மகிந்த ராஜபக்ச ஐ.நா. அதிகாரியிடம் உறுதி அளித்தார் என அரச தலைவர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
இந்தச் சந்திப்பின்போது ஐ.நா. அதிகாரியிடம் அரச தலைவர் தெரிவித்த விடயங்கள் குறித்து மேலும் தெரியவருவதாவது:
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் மீது செலுத்தப்படும் அழுத்தங்கள் நிர்ப்பந்தங்கள் குறித்து நான் புரிந்துகொள்கிறேன். அதேபோன்று நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் நீங்கள் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
வன்னி மக்களின் மீள்குடியமர்வு
24 மணி நேரத்திற்குள் 2 லட்சம் மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்தார்கள். அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தபடியே அவர்களுக்கு அரசு உணவு வழங்கி வருகின்றது, உடுதுணிகள் வழங்கி வருகின்றது, சுகாதார வசதிகளை வழங்கி வருகின்றது அத்துடன் அவர்களைக் கவனமாகப் பராமரித்து வருகின்றது.
கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளிலேயே மக்களின் மீள்குடியமர்வு விடயம் தங்கி உள்ளது. குரோசியாவில் போர் முடிந்து 16 வருடங்கள் கடந்து விட்டபோதும் அங்கு இன்னும் கண்ணிவெடிகள் அகற்றி முடிக்கப்படவில்லை. நாங்கள் அதுபோன்ற பல காலம் எடுத்துக்கொள்ள மாட்டோம்.
நான் முன்னர் வழங்கிய உறுதிமொழியில் கொஞ்சம் குறைத்துக்கொள்கிறேன். எனினும் 180 நாட்கள் இலக்குக்குள் குறைந்தது 70 விழுக்காடு மக்களை மீளக்குடியமர்த்துவோம். கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் பணிகள் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கிறேன்.
எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்திவிடுவோம் என எதிர்பார்க்கிறேன். அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான பகுதிகளை நாம் அடையாளப்படுத்த வேண்டும். அங்கு துப்பரவுப் பணிகள் (கண்ணிவெடி அகற்றல்) மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக மக்களை அங்கு அனுப்ப முடியாது.
முகாம்களில் உள்ள உறவினர்களை பொறுப்பேற்க விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாங்கள் ஏற்கனவே ஊடகங்களில் விளம்பரங்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை 2 ஆயிரம் விண்ணப்பங்களே கிடைத்திருக்கின்றன. எனவே மீண்டும் விளம்பரங்கள் ஊடகங்களில் வெளியிடப்படும்.
முகாம்களில் உள்ள மக்கள் வெளியே சென்று வருவதற்கு நாளாந்த 'பாஸ்' நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளியே சென்று வேலை செய்ய விரும்புவோர் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஊடகவியலாளர் திசநாயத்தின் தண்டனை
ஊடகவியலாளர் திசநாயகத்தின் தண்டனை விடயத்தில் நானோ எனது அரசோ நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதோ ஈடுபாடு காட்டுவதோ இல்லை. நீதிமன்ற சட்டங்களின் கீழேயே அந்தத் தண்டனை வழங்கப்பட்டது. பிரச்சினை என்னவென்றால், தண்டனையைக் குறைக்கும்படி திசநாயகம் தரப்பு கோரவில்லை என்பதுதான். அதிகூடிய தண்டனையை வழங்கும்படி சட்ட மா அதிபர் நீதிமன்றத்திடம் கோரவில்லை. மேன்முறையீடு செய்யும் போது குறைந்த தண்டனை வழங்கப்படுவதை சட்ட மா அதிபர் எதிர்ப்பார் என நான் நம்பவில்லை.
திசநாயகம் எதை எழுதினாரோ அதற்காக அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. அவர் விடுதலைப் புலிகளிடம் இருந்து பணம் பெற்றிருக்கிறார். புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வழக்கில் இந்த விடயத்திற்கு குறைந்தளவு முக்கியத்துவமே ஊடகங்களில் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை ஐ.நா. அதிகாரிகள் தனிப்படப் படித்துப் பார்த்தார்கள் என்றால் அவர்களுக்கு உண்மை நிலைவரம் புரியும்.
கைது செய்யப்பட்டு தடுத்து குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படாமல் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் உள்ளூர் ஐ.நா. பணியாளர்கள் இருவர் மீதும் அடுத்த வாரத்தில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும்.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டவர்கள் மீது நாட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டத்தை மீறும் இலங்கையர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தேவைப்பட்டிருக்கின்றன.
ஐ.நா.வில் எல்லா நாடுகளும் சமம்
ஐக்கிய நாடுகள் சபை தனது உறுப்பு நாடுகளை சிறியது பெரியது என வகைப்படுத்தாது என நான் கருதுகின்றேன். அது அமெரிக்கா, சீனா, இந்தியா அல்லது வேற எந்த நாடாக இருந்தாலும் நாங்கள் எல்லோருமே ஐ.நா.வின் உறுப்பு நாடுகள். எங்களைப் பற்றி ஐ.நா. ஏதாவது கூறினால் நாங்கள் அதனை ஆழ்ந்த கவனத்திற்கு எடுத்துக் கொள்கிறோம். அதேபோன்று பெரிய நாடுகள் எம்மைக் கொடுமைப்படுத்த முயற்சித்தால் அதற்காகவும் நாங்கள் ஐ.நா.விடம் வருவோம்.
இவ்வாறு அரச தலைவர் மேலும் தெரிவித்தார்.
சந்தேகம் கிளப்பும் மனித உரிமை அமைப்புக்கள்
இதேவேளை, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உறுதிமொழி வரவேற்கத்தக்கதுதான் எனினும் அதனை நம்ப முடியாது என மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
"அரசின் மீது சந்தேகப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன...... அவர்கள் முன்னர் சொன்ன வார்த்தைகளையே பின்பற்றியதில்லை" என்றார் மீனாட்சி கங்குலி. மனித உரிமைகள் காப்பகத்தின் ஆசிய பிரிவு இயக்குநராக இருக்கிறார் அவர்.
"நாங்கள் என்ன எதிர்பார்கிறோம் என்றால், தமிழர்களுக்கு முறையான புனர்வாழ்வு வழங்கப்பட்டு அவர்களது சொந்த வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவேண்டும். அவர்கள் சும்மா எங்கேயோ அனுப்பி வைக்கப்படக் கூடாது" என அவர் மேலும் கூறினார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.