Saturday, September 19, 2009

புலிகள் மீதான வெற்றியைக் காட்டி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறார் மகிந்த: ஜே.வி.பி.

[சனிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2009]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வெற்றியைக் காட்டி அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கீழ்த்தரமான அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் வாக்காளர்களின் உரிமையைக் கேலிக்கூத்தாக்குகிறார். அத்துடன், நாட்டின் சட்ட திட்டங்களையும் மீறி நாட்டின் ஜனநாயகத்தை கேலி செய்கிறார் எனக் குற்றம்சாட்டி இருக்கிறார் ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமசிங்க அமரசிங்க.

தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு ஆதரவாக பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 90 வீதமான வாக்களிப்பு இடம்பெற வேண்டும் என்றும் அத்தனையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாகவே விழ வேண்டும் என்றும் அரச தலைவர் ராஜபக்ச எதிர்பார்க்கிறார். இதன் மூலம் வேறு எந்தக் கட்சியும் போட்டியிடக்கூடாது எனவும் அவர் நினைக்கிறார்" என்றார் சோமவன்ச.

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு பற்றி கருத்துத் தெரிவித்த அவர், தேர்தல் போட்டியில் அந்தக் கட்சி இருப்பதற்கான குறிப்புக்கள் எதனையும் காணவில்லை என்றார்.

நிறைவேற்று அதிகார அரச தலைவர் பதவியை ஜே.வி.பியின் ஆதரவுடனேயே கைப்பற்றிய மகிந்த ராஜபக்ச தற்போது கட்சியையே மறைமுகமாகத் தாக்கி வருகிறார் எனவும் சோமவன்ச குற்றம் சாட்டினார்.

சுதந்திரக் கட்சி தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்றும் அவர் கூறினார். கட்சியின் நிறுவனரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கூட ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டே ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.