Thursday, September 24, 2009

எத்தகைய நிலையிலும் உரிமை மீறல்கள் குறித்து விசாரணை கிடையாது: சிறிலங்கா திட்டவட்டம்

[வியாழக்கிழமை, 24 செப்ரெம்பர் 2009]

மனித உரிமை மீறல்கள் அல்லது வேறு எந்தவிடயம் தொடர்பாகவும் வெளிநாடுகளோ வேறு எந்தக் குழுவோ விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என சிறிலங்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வரிச் சலுகை (ஜி.எஸ்.பி. பிளஸ்) வழங்கப்பட்டாலும் சரி வழங்கப்படாவிட்டாலும் சரி அத்தகைய வெளிச்சக்திகளின் விசாரணைகள் எவையும் அனுமதிக்கப்படமாட்டாது என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பீரிஸ் பதிலளித்தார். அப்போது சிறிலங்கா அரசின் திட்டவட்டமான முடிவை அவர் அறிவித்தார்.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகையை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிப்பதற்காக சிறிலங்கா அரசு விண்ணப்பித்திருக்கின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்துமாறு பிறசல்சில் உள்ள சிறிலங்கா தூதுவருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

"சாதாரணமான இராஜதந்திர வழிகளில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றன" என்றார் அமைச்சர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.