Thursday, September 24, 2009

அதிகாரபூர்வமற்ற முகாம்களில் தமிழர்களை தொடர்ந்து தடுத்து வைப்பது மனித உரிமை மீறல்களை அதிகரிக்கும்: மன்னிப்புச் சபை

[வியாழக்கிழமை, 24 செப்ரெம்பர் 2009,]

அதிகாரபூர்வமற்ற முகாம்களில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு எதிரான சித்திரவதைகளும் கொலைகளும் அதிகரிப்பதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துகின்றது என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் முகாமில் நேற்று புதன்கிழமை சிறிலங்காப் படையினருக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையிலேயே அது இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் வருமாறு:

தடுப்பு முகாமில் சிறிலங்காப் படையினருக்கும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் ஒருவர் மோசமாகக் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, கனகபுரத்தைச் சேர்ந்த சிறீ சந்திரமோகன் என்பவரே இவ்வாறு காயமடைந்தவர்.

பூந்தோட்டம் வவுனியா கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அதிகாரபூர்வமற்ற தடுப்பு முகாமில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சமயம் இவர் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என முன்னர் வெளியான தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்த வதந்தி காட்டுத் தீயாக முகாமுக்குள் பரவியது. இதனால் அங்கு அசாதாரண நிலை தோன்றியது. நகரில் இருந்து அந்த இடத்திற்குச் செல்வதற்கான பாதைகள் அதிகாரிகளின் துணையுடன் மூடப்பட்டன.

"அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத முகாம்களில் மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சித்திரவதைகள், காணாமல் போகச் செய்யப்படுதல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள் என்பவற்றை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். இத்தகைய முகாம்களில் முறையான சட்ட நடவடிக்கைகளோ பாதுகாப்போ கிடையாது" என மன்னிப்புச் சபையின் ஆசியப் பிரிவு இயக்குநர் சாம் சரிபி தெரிவித்தார்.

பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி போன்ற இடங்களில் உள்ள தடுப்பு முகாம்கள் வழக்கத்திற்கு மாறானவை. கடந்த மே மாதத்தில் இருந்து சிறிலங்காப் படையினரால் இவ்வாறான தடுப்பு முகாம்கள் பல விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை தடுத்து வைப்பதற்கு என துணைப் படைக் குழுக்களின் ஆதரவுடன் நடத்தப்படுகின்றன.

துணைப் படைக் குழுக்கள் பல வவுனியாவில் இயங்கி வருகின்றன என்பதுடன் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. புளொட், ரெலோ, ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இரு பிரிவுகள் என்பன இத்தகைய துணைப்படைக் குழுக்கள்.

9 ஆயிரம் விடுதலைப் புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளனர் என சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தில், மே மாதம் 25 ஆம் நாள் சிறிலங்கா தரைப் படைகளின் தளபதி சரத் பொன்சேகா அறிவித்தார்.

அதன் பின்னர் தொடர்ச்சியான கைதுகள் குறித்து அறிக்கைகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. அவற்றில் சில அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஊடகங்களிலும் வெளியாகின. ஏனைய கைதுகள் தொடர்பான தகவல்கள் முகாம்களில் உள்ள உறவினர்களால் தெரிவிக்கப்பட்டன.

இந்தக் கைதிகளில் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான செய்திகள் எவையும் தெரியாது. அதன் அர்த்தம் அவர்களை குடும்ப உறுப்பினர்களோ சட்டவாளர்களோ சென்று பார்க்க முடியாது என்பதாகும்.

இலங்கையின் வடபகுதியில் பாடசாலைகள், மாணவர் விடுதிகள் என்பன இடம்பெயர் மக்கள் தடுத்து வைக்கப்படும் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளமையை குறைந்தது 10 இடங்களில் மன்னிப்புச் சபை உறுதிப்படுத்தி உள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறன அதிகாரபூர்வமற்ற பல தடுப்பு முகாம்கள் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக செஞ்சிலுவைக் குழு கூட இந்தத் தடுப்பு முகாம்களுக்குச் சென்று தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களைப் பார்வையிட முடியாது. அவர்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்கிற எந்த விடயமும் வெளியே தெரியவில்லை.

அசாதாரண இடங்களில் உள்ள தடுப்பு முகாம்களில் தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் கைதிகள் அடைத்து வைக்கப்படுவது சிறிலங்காவில் தொடர்ந்து இடம்பெற்று வரும் ஒரு நடவடிக்கை. இத்தகைய கைதிகள் சித்திரவதைகளுக்கும் காணாமல் போகச் செய்யப்படுதல்களுக்கும் கொலைகளுக்கும் முகம் கொடுக்கிறார்கள்.

முன்னாள் போராளிகள் என்ற சந்தேகிக்கப்படுபவர்களைக் கண்டுபிடிக்கும் சோதனை நடவடிக்கைகளின்போது மனித உரிமைகள் பேணப்படுவதையும் கைதிகள் மதிப்புடன் நடத்தப்படுவதையும் சிறிலங்கா அரசு உறுதிப்படுத்த வேண்டும் என மன்னிப்புச் சபை கேட்டுக் கொள்கிறது.

அந்தச் சோதனை நடவடிக்கைகளைச் சுயாதீனக் குழுக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டதும் தாமதம் ஏதுமின்றி நீதி நடவடிக்கைகளின் முன்பாக அவர்கள் நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.