Friday, September 25, 2009

மீள்குடியேற்றம் என்ற பேரில் வவுனியா முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட 35 ஆயிரம் தமிழர்கள் வேறு முகாம்களில்: சம்பந்தன்

[வெள்ளிக்கிழமை, 25 செப்ரெம்பர் 2009]

வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருக்கும் மக்களில் சுமார் 35 ஆயிரம் பேரை மீள்குடியேற்றம் செய்வதாக அங்கிருந்து வெளியே கொண்டுசென்ற சிறிலங்கா அரசானது யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் அமைந்துள்ள வேறு முகாம்களில் அவர்களை அடைத்து வைத்திருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

இடம்பெயர்ந்த மக்களை அவர்கள் முன்னர் எங்கு இருந்தார்களோ அந்த இடங்களிலேயே கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என வலியுறுத்திய சம்பந்தன், அவர்களை விடுதலை செய்வதாகக் கூறி ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு மாற்றும் செயற்பாடுகளை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியிருக்கின்றார்.

வவுனியா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 35 ஆயிரம் தமிழர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகத் தெரிவித்த இரா.சம்பந்தன், இவ்வாறு ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு அகதிகளை இடமாற்றம் செய்வதால் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டுவிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் முகாம்களுக்குச் செல்வதற்கான அனுமதியை வழங்குவது என அரசு எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்றுள்ள அவர், 2 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ள தமது சொந்தங்களை வெளியே கொண்டுசெல்வதற்கு முன்வந்திருப்பதையிட்டும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதேவேளையில், வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டிருந்தவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் தமது சொந்தப் பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். கடந்த சில வாரங்களில் இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் உடனடியாக மீளக்குடியமர்த்துமாறு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவித்த அமைசசர் அநுர பிரியதர்சன யாப்பா, ஆனால், தற்போதைய நிலையில் அவ்வாறு அவசரப்பட்டு மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் இடம்பெயர்ந்த பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருக்கின்றது. இதற்கு போதிய கால அவகாசம் தேவை. அதன் பின்னர் மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்த பின்னர் அரசு அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.

இதேவேளையில் வவுனியா முகாம்களில் இருந்து மீள்குடியேற்றத்துக்காக என அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் வேறு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதை அரச அதிகாரிகள் பலரும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அவர்களை உரிய முறையில் பதிவு செய்ய வேண்டியிருப்பதாலேயே இவ்வாறு இவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இவ்வாறு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.