Friday, September 25, 2009

நாட்டுக்கும், படையினருக்கும் களங்கத்தை ஏற்படுத்த திட்டமிட்ட முறையில் கூட்டாக முயற்சி: மகிந்த குற்றச்சாட்டு

[வெள்ளிக்கிழமை, 25 செப்ரெம்பர் 2009]

நாட்டினதும் ஆயுதப் படைகளினதும் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி ஒன்று உள்நாட்டு மற்றும் அனைத்துலக ஊடகங்களில் ஒரு பகுதியினரால் திட்டமிட்ட முறையில் கூட்டாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியிருக்கின்றார்.

திரித்துக் கூறப்படும் செய்திகளை வெளியிடுவதன் மூலமாகவும், திட்டமிடப்பட்டு மோசடியாகத் தயாரிக்கப்படும் ஒளிநாடாக்களை ஒளிபரப்புவதன் மூலமாகவும் எமது போர் வீரர்களை போர்க் குற்ற நீதிமன்றத்தின் முன்பாக கொண்டு செல்வதற்கான முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டுள்ளார்கள் எனவும் தென்மாகாணத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது மகிந்த தெரிவித்தார்.

சிறிலங்காவின் நற்பெயரை அனைத்துலக ரீதியாகக் களங்கப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அரச சார்பற்ற சில அமைப்புக்களினால்தான் சில தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்ட மோசடி செய்யப்பட்ட ஒளிநாடா வழங்கப்பட்டது எனவும் தெரிவித்த மகிந்த, ஊடக சுதந்திரத்தை அனுபவிக்கும் குறிப்பிட்ட சில ஊடகங்கள் அதனைப் பயன்படுத்தி தம்மைத் தாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய மகிந்த மேலும் தெரிவித்ததாவது:

"நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சிலவற்றில் பொய்யான கற்பனையைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை. அரசை இழிவுபடுத்துவது மட்டுமே இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கின்றது.

ஒரு சில சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றை அரசு மறுக்கவில்லை. இவை தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடத்தி அவற்றுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்பாகக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்கின்றது. அரச தலைவர் என்ற முறையில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு நான் வழங்கியிருக்கின்றேன்.

கடந்த முப்பது வருட காலமாக இந்த நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக எமது படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளையிட்டு நான் திருப்தியடைகின்றேன். இவ்வாறான வெற்றிகளை மலர் படுக்கையில் இருந்துகொண்டு பெற்றுக்கொள்ள முடியாது. இந்த வெற்றிக்காக எமது மண்ணின் மைந்தர்களான 26 ஆயிரம் படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். இன்னும் 50 ஆயிரம் படையினர் நிரந்தரமாக ஊனமடைந்திருக்கின்றார்கள்.

இந்த நாட்டின் நிலப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியும், கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதியும் பிரபாகரனின் கட்டுப்பாட்டிலேயே நீண்ட காலமாக இருந்தது. எமது படையினரே உயிர்த் தியாககங்களின் மூலமாக இதனை மீட்டுள்ளார்கள். இன்று இந்த போர் வீரர்களை போர்க் குற்றச்சாட்டுக்களுக்காக அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள். இதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை" எனவும் மகிந்த தனது உரையில் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.