Tuesday, August 18, 2009

எந்தச் சூழ்நிலையிலும் வடபகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்படாது: சரத் பொன்சேகா அறிவிப்பு

[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] வடபகுதியில் தற்போது சுமூகமான ஒரு நிலை காணப்படுகின்ற போதிலும் எந்தவொரு சூழ்நிலையிலும் அந்தப் பகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைக்கப்போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார். கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை பயணம் ஒன்றை மேற்கொண்ட சரத் பொன்சேகா, அஸ்கிரிய பிரிவு மகாநாயக்க தேரரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியபோது, "பயங்கரவாதிகள் இன்னும் முழுமையாக படையினரால் அழிக்கப்படவில்லை. தீவிரமான பயங்கரவாதிகள் கூட பலர் உள்ளனர்" எனத் தெரிவித்தார். எதிர்காலத்தில் வடபகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கும் தான் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வடபகுதி முகாம்கள் பலவற்றை நிரந்தரமான முகாம்களாக மாற்றியமைப்பதற்கும் திட்டமிட்டிருப்பதாகவும் மகாநாயக்க தேரரிடம் விளக்கினார். இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இங்கு குறிப்பிட்ட அவர், இதற்கான நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார். "அவர்கள் மீண்டும் பயங்கரவாதிகளுடன் இணைந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அரச தலைவரும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் இப்போதும் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கின்றது" எனவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார். "அவர்கள் இப்போதும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனரான செல்வராசா பத்மநாதன் பல உண்மைகளை இப்போது வெளியிட்டு வருகின்றார்" எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.