Tuesday, August 18, 2009

மடுமாதா திருவிழாவை புறக்கணித்தனர் 10 கத்தோலிக்க குருக்கள்: முகாம்களில் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு

[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] வன்னி மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் நடந்து முடிந்த மடுமாத திருக்கோவில் வருடாந்த திருவிழாவை ஒரு தொகுதி கத்தோலிக்க குருமார்கள் புறக்கணித்துள்ளனர். மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 கத்தோலிக்க குருமார்கள் திருவிழாவை புறக்கணித்தனர் என அருட்தந்தை விக்டர் சூசை தெரிவித்தார். முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும் மதகுருமார்களுக்கும் தமது ஆதரவைத் தெரிவிப்பதற்காகவே திருவிழாவை புறக்கணித்தார்கள் என அவர் கூறினார். ஒரு புறத்தில் இருந்து, மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் மக்கள் மடு மாதா திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களால் வழிபாடு நடத்த முடிந்தது. ஆனால் மறுபுறத்தில், தேவாலயத்தைச் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களும் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வேதனையுடன் இருக்கிறார்கள். சூழவுள்ள பகுதிகளில் மக்கள் எவரும் இல்லாமல் நாங்கள் எப்படி திருவிழாவை கொண்டாட முடியும் என்று அந்த மக்கள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள் என்றார் அருட்தந்தை விக்டர் சூசை. மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப்பும் திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அவர் நிகழ்வைப் புறக்கணிக்கவில்லை என்றும் உடல்நலக்குறைவினால் கலந்துகொள்ளவில்லை என்றும் சூசை கூறினார். தடுப்பு முகாம்களில் 6 மதகுருமார்களும் 3 கன்னியாஸ்திரிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார். திருவிழா நாளில் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அனைத்து கத்தோலிக்க குருக்களும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேசமயம், மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த 35 மதகுருமார்கள் மடுமாதா திருவிழாவில் கலந்துகொண்டு அதனை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.