[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவது என்பன தொடர்பில் உள்நாட்டில் உள்ள தமிழர்களுடன் மட்டுமல்ல வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் சிறிலங்கா அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா தனது அரச அதிகாரங்களை சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் பகிந்து கொள்ளத் தவறியிருப்பது மீண்டும் வன்முறைகளுக்கு வழியேற்படுத்திவிடும் என அமெரிக்க வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் எச்சரித்துள்ளார் பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த பிளேக், அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தாமதப்படுவது விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதற்கான புதிய சந்தர்ப்பத்தை வழங்கிவிடும் என்றார். போர் காரணமாக இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களையும் சிறிலங்கா அரசு விரைவில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்று பிளேக் கோரிக்கை வைத்தார். அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதில் சிறிலங்கா அரசு காட்டிவரும் மெத்தனம் குறித்து மேற்குலகம் கொண்டுள்ள விசனத்தையே அமெரிக்கத் துணை அமைச்சர் கூறியுள்ள கருத்து வெளிப்படுத்துவதாக பிபிசி கருத்துக் கூறியுள்ளது. பெரும்பான்மைச் சிங்களவர்களால் வழிநடத்தப்படும் சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, சிறுபான்மைத் தமிழர்களின் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வழி பிறந்துவிட்டது என்ற நம்பிக்கை தோன்றியிருந்தது. ஆனால், எந்தவொரு அரசியல் தீர்வும், தான் இரண்டாவது தடவை அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பே மேற்கொள்ளப்படும் என்று மகிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்துவிட்டார். அரச தலைவர் தேர்தல் அனேகமாக அடுத்த ஆண்டில் நடைபெறலாம். இந்தத் தாமதம் பிளேக் உள்ளிட்ட மேற்குலகினரை மகிழ்ச்சி அடைய வைக்கவில்லை என்று பிபிசி தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. அவர்கள் (சிறிலங்கா) தமிழ்ச் சமூகத்தை மேலும் கவலைக்கு உள்ளாக்குவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அது சில பிரிவினரை மீண்டும் சினமூட்டும் என்பதுடன் விடுதலைப் புலிகள் ஒருங்கிணைவதற்கான புதிய சந்தர்ப்பத்தையும்கூட ஒருவேளை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடும். எனவே சிறிலங்கா அரசு தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களை நிகழ்த்துவது மிக மிக முக்கியம். உள்நாட்டில் இருக்கும் தமிழர்களுடன் மட்டுமல்ல வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். அத்துடன் நாட்டில் அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்றார் றொபேர்ட் ஓ பிளேக். முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியமர்வு என்பது சிறிலங்காவுக்கு வாசிங்ரன் வழங்கும் நிதி உதவிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டது என்று பிளேக் குறிப்பிட்டார். மீள்குடியமர்வு, மீள்கட்டுமானம், வாழ்வாதாரம் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு அமெரிக்கா நிதி வழங்குவது, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மக்களை மீளக்குடியமர்த்துவதில் சிறிலங்கா காட்டும் செயல் ஊக்கத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. இரண்டாவதாக, அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அதிகாரங்களைப் பகிர்வதற்கும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் தங்கியுள்ளது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் பிளேக். ஆனால், முகாம்களில் இருந்து கிளர்ச்சியாளர்களை வடித்தெடுத்த பின்னரே மக்கள் அவர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என சிறிலங்கா அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோன்று, எந்தவொரு அரசியல் கருத்து இணக்க முயற்சிகளும் நாட்டில் உள்ள பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கு நீண்ட காலம் எடுக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Tuesday, August 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.