Tuesday, August 18, 2009

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டத்தை நிறைவுசெய்ய முன்வாருங்கள்: உலகத் தமிழ் அமைப்புகளுக்கு உருத்திரகுமாரன் வேண்டுகோள்

[திங்கட்கிழமை, 17 ஓகஸ்ட் 2009] ஈழத்து தமிழ் பேசும் மக்களின் அதிஉயர் அரசியல்பீடமாக - உலகத் தமிழர்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து - நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தினை திடமாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்கு முன்வருமாறு அந்தத் திட்டத்தின் உருவாக்கச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உலகத் தமிழ் அமைப்புகளுக்கு வேண்கோள் விடுத்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டச் செயற்குழுவின் சார்பாக அவர் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். "உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இந்தத் திட்டத்துக்கு தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது இந்தத் திட்டத்துக்கு வலுச்சேர்த்து வருகிறது. ஏற்கெனவே - பிரித்தானிய தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம், சுவிஸ் தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழீழ மக்கள் அவை, தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம், தமிழ் நாடு திராவிடர் பேரவை உட்பட பல அமைப்புக்கள் இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வெளிப்படுத்தியுள்ளன. இந்த அமைப்புக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் அதேவேளை, உலகளாவிய ரீதியில் இயங்கும் ஏனைய தமிழர் அமைப்புக்கள் எல்லோரிடமும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவினை வழங்குமாறும் எம்முடன் சேர்ந்தியங்க முன்வருமாறும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்." என்று தெரிவிக்கும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையை நசுக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசு பகீரத முயற்சி செய்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தாயகத்தில் நமது தேசத்தின் மீது தான் நிலைநிறுத்தியுள்ள இராணுவ மேலாதிக்க நிலையின் மூலம் தமிழர் தேசத்தை அடிமைப்படுத்திவிடலாம் என்ற இறுமாப்புடன் செயற்பட்டுவரும் சிங்கள அரசு, தற்போது தனது இராணுவக் கொடும் கரங்களை சிறிலங்காவின் எல்லை தாண்டியும் விரித்துள்ளது. இதன் மூலம் புலத்தில் தமிழர் உரிமைப் போராட்டச் செயற்பாடுகளை நசுக்கிவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகிறது. சிறிலங்கா அரசின் இராணுவ மேலாதிக்க நிலையுடனான அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தாயகத்திலோ புலத்திலோ ஈழத்தமிழர் தேசம் அடிபணியப் போவதில்லை. தாயகத்தில் நமது மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களாலும் இதனை வெளிப்படுத்த முனைகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மூலமும் மக்கள் இதனைத் தம்மால் இயன்றவரை வெளிப்படுத்தியுள்ளனர். புலத்தில் மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல்பீடமாக அமையும் வண்ணம் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கான செயற்பாடுகளை நாம் மிகவும் திடமாகவும் விரைவாகவும் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம். நாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக போராடும் நமது ஜனநாயக உரிமையில் எவரும் தலையீடு செய்ய நாம் அனுமதிக்க முடியாது. நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டம் தொடர்பான விளக்கக் கோவை ஒன்றினை நாம் இம்மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளோம். இத்திட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை இக்கோவை கொண்டிருக்கும். ஒவ்வாரு நாட்டிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்படும் செயற்குழு விபரங்களையும் நாம் விரைவில் வெளிப்படுத்தவுள்ளோம். இக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டி திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக உழைக்கும். நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தின் வெற்றிக்கு நம் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும். இத்திட்டத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறோம். எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.