Friday, August 14, 2009

பதுக்கிவைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டுபிடிக்கும் வரை சமாதானம் ஏற்பட்டுவிட்டது என கூறமுடியாது: பிரதமர் அறிவிப்பு

[வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2009,] "சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு நகரில் பெரும் தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் தாக்குதல்களை நடத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கண்டுபிடிக்கப்படும் வரை நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது என என்னால் பிரகடனப்படுத்த முடியாது" என அந்நாட்டுப் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார். "மலேசியாவில் இருந்து கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட செல்வராஜா பத்மநாதன், கொழும்பில் தாக்குதல்களை நடத்தும் நோக்கத்துடன் பெரும் தொகையான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கொழும்பு நகரில் விடுதலைப் புலிகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார் எனக் குறிப்பிட்ட பிரதமர், "இவ்வாறு பதுக்கிவைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்படும் வரையில் நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது என என்னால் பிரகடனம் செய்ய முடியாது" எனவும் அறிவித்தார். ஹொரணை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க, "நாடு எதிர்நோக்கிய மிகப்பெரிய சவாலை நாம் இல்லாது ஒழித்துவிட்டபோதிலும், கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இன்னும் பெருமளவு ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டுபிடித்து அழிப்பது அவசியம்" எனவும் குறிப்பிட்டார். "நாம் மேலும் ஒருவரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்திருக்கின்றோம். குண்டுகளையும் வெடிபொருட்களையும் கொழும்புக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு இவரிடமே இருந்தது" எனவும் தெரிவித்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, "நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால், இவ்வாறு மறைத்துவைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் கண்டுபிடித்து நாம் அழிக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.