Tuesday, August 18, 2009

வெள்ளத்தால் முகாம்களில் சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழப்பு

[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] வன்னியில் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒரு சிறுவனும் அடங்கும். வெள்ளத்தில் மலசலகூடம் அடித்துச் செல்லப்பட்டதில் குழிக்குள் வீழ்ந்து சிறுவன் உயிரிழந்தான் என்றும் ஏனையவர்கள் மழையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில் குளிர் அதிகமாகி இறந்தார்கள் என்றும் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கூறினர். அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதங்கள் மிகப்பெரியவை எனக் கூறிய கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ், உண்மையான பருவமழை ஏற்படுத்தக்கூடிய சேதம் உண்மையிலேயே கவலைக்கு உரியதாக இருக்கின்றது என்றார். மலசலகூடங்கள் நிறைந்து வழிகின்றன, சேறும் மனிதக் கழிவும் சேர்ந்து மக்களின் கூடாரங்களையும் பொது சமையல் இடங்களையும் ஊடறுத்துப் பாய்கின்றன என உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீரும் ஆற்று நீரும் - இவைதான் முகாமின் பிரதான நீர்வளங்கள் - மலம் கலந்த கழிவு நீரினால் மாசடைந்துள்ளன. அத்துடன், வெள்ளம் முகாமில் இருந்த வடிகால் அமைப்பு வழிகளை எல்லாம் அடைத்துச் சென்றுவிட்டது. இந்நிலை தண்ணீர் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் முகாம்களில் அதிகரிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முகாம்களுக்கு குடிதண்ணீர் விநியோகிப்பதுகூட மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. தண்ணீர் பௌசர்கள் மூலம் குடிதண்ணீர் விநியோகிப்பதற்கு முயன்றாலும்கூட, உள்ளே வீதிகளும் பாதைகளும் சேறாகிக் கிடப்பதால் அதுவும் முடியாமல் இருப்பதாக உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர். முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் மோசமான தெரிவு எனக் கூறியிருக்கும் உதவிப் பணியாளர்கள், வடிகால் அமைப்பு வசதிகளைச் செய்வதற்கு ஏற்ற பகுதியல்ல அவை எனவும் கூறுகின்றனர். இதன் விளைவாக மழை பெய்ததும் அப்பகுதி எங்கும் சேறும் சகதியும் கடல் போல் காட்சியளிக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாகவே தகவமைப்பு ரீதியாகவோ மனிதர்கள் வாழக்கூடிய பகுதி அல்ல அது என்பது எனது எண்ணம். பருவமழை காலம் முழுவதையும் அங்கு கையாள்வது என்பது முடியாத காரியம் என்று தெரிவித்தார் அனைத்துலக தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் சிறிலங்கா இயக்குநர் டேவிட் வைட்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.