Tuesday, August 18, 2009

மழையால் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை கருத்திற்கொண்டு முகாம் மக்களை விடுவியுங்கள்: மனித உரிமைகள் காப்பகம்

[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] பருவ மழையால் வன்னி தடுப்பு முகாம்களில் மக்கள் வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்களை உடனடியாக விடுவிக்குமாறு, அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. முகாம்களின் நிலை தொடர்பில் அது வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு: கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையற்ற அச்சுறுத்தலாக மாறியுள்ளது. முகாம்களின் படுமோசமான நிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அங்கு இருந்து வெளியேறி நண்பர்களுடன் அல்லது அவர்களை ஏற்றுக்கொள்ளும் குடும்பங்களுடன் மழை காலத்தில் தங்கி இருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். மழை வெள்ளத்துக்குள் மக்களை அந்த முகாம்களுக்குள் தடுத்து வைத்திருப்பது அவர்களின் சுகாதாரத்துக்கு மட்டும் அன்றி உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. இது சட்டவிரோதமானது, ஆபத்தானது, மனிதத்தன்மையற்றது என்றார் மனித உரிமைகள் காப்பகத்தின் ஆசியப் பிராந்திய துணை இயக்குநர் பிறட் அடம்ஸ். விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையிலான போர் தீவிரமடைந்ததை அடுத்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக அரசு தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. ஆனால் அவற்றை நலன்புரி நிலையங்கள் என அரசு அழைக்கிறது. இந்த முகாம்களில் இருந்து சில ஆயிரம் மக்கள் மட்டுமே இதுவரைக்கும் தமது வீடுகளுக்கு அல்லது வேறு இடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மழை காலத்தை அடுத்து கடந்த சில நாட்களாக இலங்கையின் வடபகுதியில் கடும் மழை பெய்கிறது. இதனால் முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெனிக் பாம் முகாமின் வலயங்கள் - 2, 4 வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருக்கும் பெரிய முகாம்கள் இவை. அடுத்த மாதம் மழை இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் ஏற்கனவே சனநெரிசல் அதிகமாக இருக்கும் இந்த முகாம்களின் நிலைமை மேலும் மோசமாகப் போகின்றது. சில செக்கன்களுக்குள் எமது தற்காலிக தங்குமிட விரிப்புகளுக்குள் நீர் ஊற தொடங்கிவிட்டது. சில நிமிடங்களின் பின்னர் எல்லா இடங்களிலும் வெள்ளம். எங்கள் எல்லாப் பொருட்களையும் நாம் இழந்துவிட்டோம். சமைப்பதற்குக்கூட இப்போது எமக்கு இடம் இல்லை. யாரிடம் இருந்தும் உதவி பெறவும் முடியவில்லை. ஏனெனில் எல்லோரும் ஒரு நிலைமையில்தானே இருக்கிறோம். இது மிகக் கொடூரமானது. நாங்கள் ஏற்கனவே திகிலடைந்து கிடக்கிறோம். இப்போது நிலைமை இன்னும் மோசமாகி இருக்கிறது என்று மனித உரிமைகள் காப்பகத்திடம் தெரிவித்தார் 30 வயதான ஆனந்தி. இவருக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் ஆனந்தியின் அந்த தற்காலிகக் கொட்டகைக்குள் வசிக்கிறார்கள். அது 5 பேர் வசிப்பதற்கு மட்டுமே என வடிவமைக்கப்பட்ட கொட்டகை. ஐக்கிய நாடுகள் சபை கூறுவதன்படி பெரும்பாலான முகாம்கள் சனநெருக்கடி மிக்கவை. வலயம் - 2, 4 முகாம்களில் 50 ஆயிரம் பேரைத்தான் உள்ளடக்க முடியும். ஆனால் ஜூலை மாதம் 28 ஆம் நாள் முதல் அங்கு ஒரு லட்சம் பேர் தங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். மனித உரிமைகள் காப்பகத்திடம் இந்த நிலைமைகள் குறித்து யார் பேசினார்களோ அவர்களது உண்மையான பெயர் விபரங்கள் பாதுகாப்புக் கருதி இங்கு வெளியிடப்படவில்லை. மழை காரணமாக தற்காலிக மலசலகூடங்கள் வெள்ளத்தால் நிரம்பி விட்டன அல்லது இடிந்து தகர்ந்து விட்டன. இதனால் வெள்ளத்துடன் கலந்து கழிவு நீர் முகாமின் பல பகுதிகளுக்கும் பரவிவிட்டது. இது நோய்கள் பரவுவதற்கான ஏதுநிலையை அதிகரித்துள்ளது. சில மலசலகூடங்கள் முழுவதுமாக வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. அவை இப்போது நீரில் மிதப்பது போன்றுதான் காட்சி அளிக்கின்றன. மலசலகூடக் குழிகள் இடிந்து தகர்ந்துவிட்டன. வெள்ள நீருடன் சேர்ந்து மனிதக் கழிவுகள் அப்பகுதி எங்கும் பச்சையும் மண்நிறமுமாக பரவிக் கிடக்கின்றன. சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகின்றது என்றார் சாந்தாதேவி. இவரும் வலயம் - 2 முகாமிலேயே இருக்கிறார். தமது முகாம் அமைந்துள்ள பகுதி வழமையாகவே மழை காலங்களில் வெள்ளம் ஏற்படும் இடம் என விளக்கினார் ஆனந்தி. கடும் மழைக்கு முன்னர் அவர்கள் எங்களை விடுவிக்கவில்லை எனில் நாங்கள் தண்ணீராலேயே அடித்துச் செல்லப்பட்டுவிடுவோம். நோய்களும் பரவ தொடங்கிவிட்டன. அது மிகவும் கொடூரமாக இருக்கப்போகிறது என்று ஆனந்தி மேலும் தெரிவித்தார். முகாம்களில் ஏற்கனவே தொடர்ச்சியாக நோய்கள் பரவுகின்றன என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் பதிவு செய்திருக்கிறார்கள். வாந்திபேதி, சின்னம்மை, கல்லீரல் அலர்ச்சி, வயிற்றுளைவு போன்ற நோய்களால் ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளார்கள். முகாம்களின் மோசமான நிலைமை காரணமாக அங்குள்ளவர்கள் தொடர்ந்தும் மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றார்கள் என்று அவதானிகள் கூறுகின்றனர். அண்மைய மழையை அடுத்தும் அங்கு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், முகாம்களை நிர்வகிக்கும் படையினரால் உடனடியாகவே அது அடக்கப்பட்டுவிட்டது. ஜூன் மாதத்தில் முகாம் மக்கள் குறைந்தது இரண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரால் அது ஒடுக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் எதிர்ப்புக்கள் கிளம்பலாம் என அச்சப்பட்ட படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு இலகுவாக முகாம்களை சிறிய பிரதேசங்களாகப் பிரித்தனர். முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்குமாறு மனித உரிமை அமைப்புக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. விடுவிக்கப்பட்டால் சென்று தங்குவதற்குப் பெரும்பான்மையான மக்களுக்கு வெளியே நெருங்கிய சொந்தங்கள் உள்ளிட்ட உறவினர்களோ நண்பர்களோ இருக்கிறார்கள். தன்னை விடுவித்தால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயாருடனோ திருகோணமலையில் உள்ள மாமியாருடனோ சென்று தன்னால் வசிக்க முடியும் என்று ஆனந்தி கூறினார். முகாம்கள் கிட்டத்தட்ட பாலைவனங்கள் போல் கிடக்கின்றன. இங்கு மரங்கள் எவையும் இல்லை என்றார் ஆனந்தி. வெய்யில் காலங்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கிறது. மழை காலமாக இருந்தால் நடக்கவே முடியாது. அந்தளவிற்கு சேறும் சகதியுமாக மண் மாறிவிடும். ஒரு வயதுக் குழந்தையை வைத்துக்கொண்டு முகாமுக்குள் நடமாடுவது என்பது மிக மிக சிக்கலானது. எனது மகனை கூடாரத்துக்குள் தனியேயும் விட்டுச் செல்ல முடியாது. இங்கு இருக்கும் எனது பற்றிக் கூறுவது மிகபெரும் வலிதரும் விடயம். நான் தனித்திருக்கிறேன். மிக மோசமாகத் தனிமையை உணர்கிறேன். யாழ்ப்பாணத்துக்கோ திருகோணமலைக்கோ நான் போக முடிந்தால் என்னால் மீண்டும் இயல்பு வாழ்க்கையை வாழ முடியும் கண்ணீருடன் கூறுகின்றார் ஆனந்தி. அந்த மக்களை முகாம்களில் இருந்து விடுவிப்பதற்கு சிறிலங்கா தொடர்ந்து மறுத்து வருகின்றது. மக்கள் மத்தியில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை வடிகட்ட வேண்டிய தேவை இருக்கின்றது என்று அது கூறுகின்றது. மக்களை விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளித்த, சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவருமான பாலித கோகன்ன, "பாதுகாப்பைத் தவிர்த்துவிட்டு உரிமைகளைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருக்கின்றது" என்று கடந்த 10 ஆம் நாள் பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். கடந்த 15 ஆம் நாள் சிறிலங்காவின் டெய்லி மிரர் நாளேட்டுக்கு வழங்கிய கருத்தில், மீள்குடியமர்வு மற்றும் அனர்த்த முகாமை அமைச்சர் ரிசாத் பதியுதீன், முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டதற்கு ஐ.நா. நிறுவனங்களே காரணம் என்றார். முகாம்களின் வடிகால் வசதிகள் செயல் இழந்து போனதற்கு அரசை யாரும் குறைசொல்ல முடியாது என்றார் அவர். முகாம்களின் மொத்த நிலைமைக்கும் அரசுதான் காரணம் என்று அடித்துக் கூறுகிறார் மனித உரிமைகள் காப்பகத்தின் ஆசியப் பிராந்திய துணை இயக்குநர் பிறட் அடம்ஸ். இழிவான நிலையில் மக்களைப் பூட்டி வைத்துவிட்டு உதவி நிறுவனங்கள் வழங்கிய வாக்குறுதிகளுக்காக அவர்களைத் திட்டுவது சந்தேகமே இல்லாமல் வெட்கக்கேடானது என்று அடம்ஸ் மேலும் கூறினார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.