Tuesday, May 05, 2009

அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் ஓயாத உரிமைக்குரல்

[செவ்வாய்க்கிழமை, 05 மே 2009] மெல்பேர்ண் வாழ் தமிழ் சமூகத்தினால் நாளை முதல் தொடர்ச்சியான கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்படவிருக்கிறது. நாளை புதன்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி தொடக்கம் 6மணி வரை இந்த ஓயாத கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவிருக்கின்றது. இதன் முதலாவது நாள் முன்னெடுப்பாக, மெல்பேர்ண் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் மாலை 4 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகிறது. மாலை 6 மணிவரை தொடரும் இந்த முன்னெடுப்பில் அனைத்து மெல்பேர்ண் தமிழ் உறவுகளையும் சிரமம் பாராது கலந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். நிகழ்விலே பங்கெடுக்கும் தமிழ் உறவுகள் அனைவரையும் கறுப்பு வெள்ளை ஆடைகளை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். எம் உறவுகள் படும் அவலங்களையும்,சிறிலங்கா அரசு நிகழ்த்தும் கொடூரமான இன அழிப்பு பற்றிய ஆவணப்பதாகைகளையும் தன்னெழுச்சியாக மக்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. மாலை வேளை பணி முடித்து வீடு திரும்பும் பல்லின மக்களிடம் ஆயிரக்கணக்கில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாள் முன்னெடுப்புகளையும் மெல்பேர்ண் வாழ் தமிழ் உணர்வாளர்கள் பலரும் பொறுப்பெடுத்து நடாத்த முன்வந்துள்ளார்கள். தாய் நிலத்திலே இடைவிடாது ஓயாது இன அழிப்பு போர் தொடரும் நிலையில்,அந்த இன அழிப்பு போரால் அழிந்து போகும் எம் உறவுகளை காக்க புலத்திலே நாம் இடைவிடாது போராட்டம் செய்யவேண்டிய கடமையில் இருக்கிறோம். இந்த தொடர் ஒயாத கவனயீர்ப்பு நிகழ்வுகள் மெல்பேர்ண் வாழ் தமிழ் சமூகத்தின் உணர்வுபூர்வமான பங்களிப்பாக மாறி அவுஸ்திரேலிய அரசின் மனக்கதவுகளை திறக்க வேண்டும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.