Friday, May 01, 2009

"ஒப்புக்கொண்ட விடயங்களை மதித்துச் செயற்படுங்கள்": சிறிலங்காவை வலியுறுத்தும் பிரான்ஸ்

[வெள்ளிக்கிழமை, 01 மே 2009] அனைத்துலக சமூகத்துக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் எதனையும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை எனக் குற்றம் சாட்டியிருக்கும் பிரான்ஸ், ஓப்புக்கொண்ட விடயங்களை மதித்துச் செயற்படுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு நேற்று வியாழக்கிழமை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. "இது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என்பதை சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியவர்களாக உள்ளோம்" என ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரான்சின் தூதுவர் ஜெயின் மொறிஸ் றிப்பிட் நியூயோர்க்கில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற அதிகாரபூர்வமற்ற விவாதத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் உரையாடினார். சிறிலங்கா அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் ஒரே நிலையில் வைத்து அனைத்துலக சமூகம் பார்க்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், சிறிலங்கா அரசாங்கம் தான் ஒப்புக்கொண்ட விடயங்களை மதித்துச் செயற்படவில்லை என்பது அதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது" எனவும் தெரிவித்தார். "சிறிலங்கா அரசு பல விடயங்களைச் செயற்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றது. கனரக ஆயுதப் பாவனையை நிறுத்துவதாக கூறியுள்ளது. மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஐ.நா.வின் மனிதாபிமானப் பணியாளர்களை அனுமதிப்பதாகக் கூறியிருக்கின்றது. இடம்பெயர்ந்த மக்களை முதலாவது வடிகட்டும் பகுதிக்கு அனத்துலக அவதானிகளை அனுமதிப்பது தொடர்பான சாத்தியங்களை ஆராய்வதாகவும் கூறியிருந்தது. அத்துடன் மனிதாபிமான அமைப்புக்கள் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த உறுதிமொழிகளில் பெரும்பாலானவை இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை" எனவும் அவர் ஐ.நா. பாதுகாப்புச் சபை வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தாக பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.