[வெள்ளிக்கிழமை, 01 மே 2009] முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரையோரப் பகுதிக்குள் நுழைவதற்கான கடல் மற்றும் தரைமார்க்க நகர்வுகளை சிறிலங்கா படையினர் கடந்த நான்கு நாட்களாக தீவிரமாக மேற்கொண்டுவருகின்ற போதிலும் கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக படைநகர்வு தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளையில் இந்த முன்நகர்வைத் தடுத்துநிறுத்துவதற்காக விடுதலைப் புலிகள் ஏழு கரும்புலித் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதல்களில் படையினருக்குப் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது தொடர்பாக தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு படைத் தரப்பு விரும்பவில்லை எனத் தெரிகின்றது. வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதி ஊடாக பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் நேருக்கு நேர் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைத்திருக்கும் பாரிய மண் அணையைத் தாண்டிச் செல்லமுடியாத நிலையில் படையினர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதியில் இடம்பெற்ற கடும் சமர் மற்றும் மண் அணையைத் தாண்டிச்செல்ல முடியாத நிலை என்பன காரணமாக படையினரின் முன்நகர்வு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட புலிகளின் முக்கிய தலைவர்கள் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. முள்ளிவாய்க்கால் கடற்கரைப் பகுதியில் ஒரு தரையிறக்கத்தை மேற்கொண்டு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி முன்நகரும் அதேவேளையில் வெள்ளமுள்ளிவாய்க்காலின் தென்பகுதியில் உள்ள வட்டுவாகல் பகுதியில் இருந்து உள்ளே நுழைவதற்கான பாரிய தாக்குதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணி மேற்கொண்டுள்ளது. இப்படையணிதான் விடுதலைப் புலிகளின் பாரிய மணல் அணையைத் தாண்டிச் செல்ல முடியாது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. இதேவேளையில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது படையணி அம்பலவன்பொக்கனையின் தென்பகுதியில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்படையணி 8 ஆவது சிறப்புப் படையணியின் கொமாண்டோக்களுடன் இணைந்து கரைய முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பகுதியிலும் விடுதலைப் புலிகள் பாரிய மண் அணை ஒன்றை அமைத்திருப்பதுடன் கடுமையான எதிர்த் தாக்குதலையும் தொடுத்திருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தற்போது ஆறு கிலோ மீற்றர் நீளமான நிலப்பரப்பு மட்டுமே இருப்பதாக நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினர் மீது நேற்று முன்நாள் நான்கு தற்கொலைத் தாக்குதல்களைக் கரும்புலிகள் நடத்தியுள்ளனர். 58 ஆவது படையணியினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான தாக்குதல்களை எதிர்பார்த்து படையினர் மேற்கொண்டிருந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. கரையமுள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி நேற்று முன்நாள் படையினர் பாரிய நகர்வு ஒன்றை மேற்கொண்ட போது கடும் சமர் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதியில் விடுதலைப் புலிகள் பெருமளவு கண்ணிவெடிகளைப் புதைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இரட்டைவாய்க்காலின் தென்பகுதியில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள 58 ஆவது படையணி நேற்று தமது முன்நகர்வு நடவடிக்கையை மீண்டும் மேற்கொண்டனர். ஏப்ரல் 28 ஆம் நாளுக்குப்பின்னர் விடுதலைப் புலிகள் ஆறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு சந்தர்ப்பங்களில் அவர்கள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் வந்து அவற்றை வெடிக்கவைத்துள்ளனர். இருந்தபோதிலும் இத்தாக்குதல்களின் போது படையினருக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இராணுவத் தரப்பினரால் வெளியிடப்படவில்லை. இதேவேளையில் முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் கடல்வழியாகத் தப்பிச் சென்றுவிடலாம் என்பதால் சிறிலங்கா கடற்படையினர் முல்லைத்தீவு கடற்பகுதியில் முழு அளவிலான விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவுக் கடற்பகுதியில் நான்கு பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டு கடற்படையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்கும் அதேவேளையில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளையும் கடற்படையினர் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இப்பகுதியில் கடற்படையினருடைய பெருமளவு கதுவீகள், டோரா படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கதுவீகள் மூலமாக கடல் மற்றும் தரைப் பகுதிகளின் நடமாட்டத்தை கடற்படையினர் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும் வெளியே இருந்து அவர்களுக்கு உதவிகள் வருவதைத் தடுப்பதற்காகவுமே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Friday, May 01, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.