Friday, May 01, 2009

நீங்களே எங்கள் நம்பிக்கை; புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் நீங்கள் வாழுங்கள்!: ஜெயலலிதாவுக்கு அவுஸ்திரேலிய தமிழர்கள் வாழ்த்து

[வெள்ளிக்கிழமை, 01 மே 2009] இந்திய மத்திய அரசு தான் இன்று சிங்கள அரசுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இந்த சமயத்தில் தங்களின் குரல் எமக்கு நம்பிக்கையை அளிக்கின்றது. ஈழத் தமிழர்களின் விடிவிற்கு ஒரே வழி சுதந்திர தமிழீமே. இதனை வலியுறுத்தி உங்கள் குரல் ஒலிக்க வேணடும் என உரிமையோடு வேண்டுகின்றோம் என்று தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு சகோதரி செல்வி ஜெயலலிதா அவர்கட்கு வணக்கம் பல, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களின் சங்கங்களை உள்ளடக்கிய சம்மேளனமே தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனமாகும். இதன் ஆரம்ப காலத் தலைவர் கேம்பிறிஜ் பல்கலைகழகத்தில் தன் பெயரைப் பதித்த புகழ்பெற்ற விஞ்ஞானி பேராசிரியர் மாமனிதர் எலியேசர் ஆவர். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வாழ்வா சாவா என்று இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளது. இதன் நீண்ட இரத்தம் தோய்ந்த அதே சமயம் அடிபணிய மறுக்கும் ஒரு தேசத்தின் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை அறிந்த ஒரு புரட்சித் தலைவரின் வழியில் வந்த திராவிட சிசு நீங்கள். அதனால் அவைபற்றி எதுவுமே நாம் கூறத்தேவையில்லை. அண்மையில் தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் அவலநிலை கண்டு துடிக்கும் எம் உடன்பிறப்புக்களின் எழுச்சியைக் கண்டபோது தாங்க முடியாத வலியில் தவிக்கும் நாம், நாங்கள் யாரும் அற்ற அனாதைகள் அல்ல என ஆறுதல் அடைகின்றோம். இதற்கெல்லாம் சிகரமாக இந்திய மத்திய அரசு தமிழின அழிப்புக்கு துணைபோவதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டிய தங்களின் அறிக்கை அமைந்தது. இதற்காக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து வாழ் ஈழத் தமிழர்களின் அன்பையும் நன்றிகளையும் தங்களுக்கும் அ.தி.மு.க. கட்சிக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்திய மத்திய அரசின் கொள்கைதான் இன்று சிங்கள இனவெறி அரசிற்கு தமிழின அழிப்பிற்கான ஊக்கத்தை அளித்துள்ளது. பாரம்பரிய கலாசாரத்தையும் உன்னதமான வரலாற்றையும் கொண்ட பாரதத்தின் இன்றைய அரசாங்கம் அன்னிய சக்திகளின் அடிவருடியாக சோரம் போவதன் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்றா என எண்ண வைக்கிறது. இந்த சமயத்தில் தங்களின் குரல் எமக்கு நம்பிக்கையை அளிக்கின்றது. ஈழத் தமிழர்களின் விடிவிற்கு ஒரே வழி சுதந்திர தமிழீழமே. இதனை வலியுறுத்த தமிழகத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என உரிமையோடு வேண்டுகின்றோம். இவை சம்பந்தமாக தமிழக சட்ட சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்பதே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றை செய்திட விரையுங்கள். புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் வாழுங்கள். சிற்றம்பலம் இராகவன் Dr S Ragavan (Raga) தலைவர் - தென்துருவ தமிழ்ச் சங்க சம்மேளனம்.

1 comment:

  1. கதாசிரியர்கள் நடிப்பிலும் மயங்காதீர்கள்,
    கதாநாயகியின் நடிப்பிலும் மயங்காதீர்கள்.

    தமிழக அரசியல் சாக்கடைகள், இந்திய பார்ப்பனீய ஏகாதி பத்தியம் ஈழத்திற்கு உதவாது.
    உலகெங்குமுள்ள உண்மைத் தமிழர்களும்,தமிழகத்தில் உள்ள உண்மைத் தமிழர்களும் சேர்ந்து உழைத்துப் பெற வேண்டியது ஈழம்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.