[புதன்கிழமை, 13 மே 2009,] அப்பாவிப் பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்குமாறு அமெரிக்கா ஜனாதிபதி பாராக் ஓபாமாவுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது நடந்துகொண்டிருக்கும் மிக மோசமான நிகழ்வுகள் தொடர்பாக உடனடியாக கலந்து ஆலோசித்து அங்கு நடக்கும் சர்வதேசச் சட்ட மீறல்களை விசாரிக்க ஐ.நா. விசாரணைக் குழுவொன்றை அனுப்பிவைக்குமாறு ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவர்களுக்கும் மனித உரிமை அமைப்புக்கள் அழைப்புவிடுத்துள்ளன. பாதுகாப்பு வலயத்துக்குள் இயங்கும் வைத்தியசாலை தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளான பின்பே சர்வதேச மன்னிப்புச் சபையால் இவ் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தாக்குதல்களில் 38 நோயாளிகளுக்கு மேலானோர் பலியானது இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக சிறிலங்காவின் நிலமைகள் மோசமடைந்திருப்பதாகவும் 400க்கும் மேற்பட்டோர் பலியாகியதும் அதில் 100க்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள் என்றும் மன்னிப்புச் சபை விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மே 13ஆம் திகதி இந்தியாவின் பொதுத் தேர்தல்கள் முடிந்தபின் சிறிலங்கா நிலமைகள் இன்னும் மிக மோசமாகி ஒரு ரத்தஆறு பாயும் அபாயம் உள்ளது எனவும் மன்னிப்புச் சபையின் அமெரிக்க மேல்நிலை அதிகாரி கேர்ற் கொயிறிங் அவர்கள் கூறியுள்ளார். இதற்கெதிராக செயலாளர் கிலறி மற்றும் அமெரிக்கா தூதர் சுசன் றைஸ் அவர்கள் தங்கள் குரல்களை கொடுத்துள்ள நிலமையில் ஓபாமா அவர்களும் சிறிலங்காவில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக தனது குரலை ஓங்கிக் கொடுக்குமாறு அவர் மேலும் கேட்டுள்ளார். மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தற்காலிக யுத்த நிறுத்தமொன்றை கொண்டுவர ஓபாமா அழைப்பு விட வேண்டுமென்றும், சிறிலங்கா அரசு ஐ.நா. கண்காணிப்புக் குழுவை போர் நடக்கும் இடத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் மற்றும் தனி ஊடகங்களை அதே இடங்களுக்கு சுதந்திரமாக வேலை செய்யவிட வேண்டுமென்றும் ஓபாமாவை அழைப்புவிடுக்குமாறு மன்னிப்புச் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வேண்டுகோள்களை ஐ.நா.பாதுகாப்புச் சபையும் தாமதிக்காமல் முன்வைக்க வேண்டுமென்றும் அவ்வறிவித்தலில் கேட்கப்பட்டுள்ளது.
Wednesday, May 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.