Thursday, May 14, 2009

இலங்கை விவகாரத்தில் ஐ.நா. விரைந்து தலையிட வேண்டும்: நோர்வே கோரிக்கை

[வியாழக்கிழமை, 14 மே 2009] இலங்கையில் முன்னெடுக்கப்படும் போரினைக் கண்டித்துள்ளதோடு, அந்நாட்டின் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை விரைந்து தலையிட வேண்டும் என்றும் நோர்வே கோரிக்கை விடுத்துள்ளது. நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் யூணாஸ் கார் ஸ்தோற மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் இணைந்து நேற்று புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளனர். இரத்தக்களரியை தடுத்து நிறுத்துவதற்கு ஒரு மனிதாபிமான போர் நிறுத்தம் மிக அவசரமாக ஏற்படுத்தப்படவேண்டும் என எரிக் சொல்ஹெய்ம் கோரியுள்ளார். போர் நடவடிக்கைகள் தொடருமாயின், அரசாங்கம் 'பாதுகாப்பு வலையமாக' பிரகடனப்படுத்தியுள்ள பகுதியில் மிக மோசமான உயிரழிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பின் படி, குறைந்தது 50 ஆயிரம் மக்கள் அந்த வலயத்திற்குள் உள்ளனர். இரு தரப்பிற்கு மத்தியிலும் போரை நிறுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் இதுவரை பயனளிக்கவில்லை என எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார். இருதரப்பும், தீர்வு தொடர்பான அனைத்துலக சமூகத்தின் முயற்சியைப் புறம் தள்ளி போரைத் தொடர்வதையிட்டு, எமது கடுமையான விமர்சனத்தினை முன்வைக்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா விவகாரம் விவாதிக்கப்பட வேண்டும் என வெளியுறவு அமைச்சர் யூணாஸ் கார் ஸ்தோற தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வே ஆகியன இலங்கை விவகாரம் தொடர்பாக நேற்று முன்நாள் கலந்தாலோசித்தன. சிறிலங்கா அரசாங்கம் தனது கடப்பாடுகளுக்கு அமைவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதிலும், பொதுமக்கள் அடைக்கலம் புகுந்துள்ள வலயத்தை நோக்கி தாக்குதல் நடத்தக்கூடாது என்ற சிறிலங்கா அரசாங்கத்தை நோக்கிய நிபந்தனையில் இணைத்தலைமை நாடுகள் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. அதேவேளையில் போர்ப்பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு அவசியமானதாகும். செயலாளர் நாயகம் பான் கீ மூனின் சிறிலங்காவிற்கான பயண முயற்சி வரவேற்பிற்குரியது. போரை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் சபை போர்ப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு, மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். பொதுமக்கள் உள்ள அனைத்துப் பிரதேசங்களுக்குள்ளும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன எவ்வித தடைகளும் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும். அனைத்துலக மனிதாபிமான சட்டவிதிகளைப் பேணவேண்டிய பொறுப்பு போரில் ஈடுபட்டுள்ள தரப்புகளுக்கு உண்டு. ஆயுத முரண்பாட்டுச் சூழலில் பொதுமக்களின் பாதுகாப்பினை இருதரப்பும் உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்திய சம்பவங்கள் உரிய முறையில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.