Wednesday, May 13, 2009

"போரை நிறுத்தி ஐ.நா. மனிதாபிமானக் குழுவை போர்ப் பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும்": அமெரிக்கா, பிரித்தானியா கோரிக்கை

[புதன்கிழமை, 13 மே 2009] போர்ப் பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவதற்கு வசதியாக போரை முடிவுக்குக் கொண்டுவந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானக் குழு ஒன்று அந்தப் பகுதிக்குச் செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அனுமதிக்க வேண்டும் என அமெரிக்காவும், பிரித்தானியாவும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹில்லறி கிளின்ரன், பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், வடபகுதியில் தற்போது இடம்பெறும் மோதல்கள் காரணமாக உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளையிட்டு தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். பாதுகாப்பு வலயம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் பெருந்தொகையான பொதுமக்கள் அண்மைக்காலங்களில் கொல்லப்பட்டிருப்பது தொடர்பாக தமது அச்சத்தை வெளிப்படுத்திய அவர்கள், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அந்தப் பகுதியில் உள்ள மக்கள் சுதந்திரமான முறையில் வெளியே வருவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். சிறிலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை எனவும் பாரிய தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டது எனவும் தெரிவித்த ஏப்ரல் 27 ஆம் நாள் அறிவித்த தமது உறுதிமொழியின்படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.