[புதன்கிழமை, 13 மே 2009] போர்ப் பகுதிகளில் நிலைமைகள் மிகவும் மோசமாகி வருவதன் காரணமாக சிறுவர்கள் பலியாவதைக் கண்டு பேரதிர்ச்சியடைவதாக ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக பி.பி.சி. செய்திச் சேவைக்குப் பேட்டி ஒன்றை வழங்கிய ராதிகா குமாரசாமி, "மோதல்கள் தீவிரமடைந்து வருவதையிட்டும், அதன் மூலம் சிறுவர்கள் பெருமளவுக்குப் பாதிக்கப்படுவதையிட்டும் நான் பேரதிர்ச்சியடைந்தேன்" எனத் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: "போர் இடம்பெறும் பகுதிகளின் தற்போதைய நிலைமை நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு மிகவும் மோசமாக இருக்கின்றது. இந்த மோதல்ளில் ஏராளமான சிறார்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் அல்லது படுகாயமடைந்திருக்கின்றார்கள். இது இப்படியே தொடரமுடியாது. தொடர அனுமதிக்கக்கூடாது. சிறுவர்களைக் கட்டாய பணயக் கைதிகளாக்கக் கூடாது. அத்துடன், அவர்களை வலுக்கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தவும் கூடாது. விடுதலைப் புலிகள் தம்மிடம் உள்ள அனைத்து சிறுவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அந்தச் சிறுவர்கள் அவர்களுடைய குடும்பங்களின் பராமரிப்பில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட வேண்டும். மோதல் பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுவர்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த முகாம்கள் அனைத்துலக தரத்தில் அமைக்கப்படவில்லை. எனது உடனடி வேண்டுகோள் என்னவென்றால், அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன், தற்போதும் மோதல் பகுதிகளில் உள்ள சிறுவர்களை அந்தப் பகுதிகளிலில் இருந்து பாதுகாப்பான முறையில் விடுவிப்பது தொடர்பான பேச்சுக்களை தொடங்க வேண்டும். இதற்காக மனித நேய அமைப்புக்களின் பிரதிநிதிகளை அந்தப் பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும். இதனைவிட மோதல் நடைபெறும் பகுதிகளில் உள்ள சிறுவர்களின் நிலை தொடர்பாக ஆராய்வதற்காக அந்தப் பகுதிக்கு தமது சிறப்புப் பிரதிநிதி ஒருவரை அனுப்பிவைப்பது தொடர்பாகவும் சிறிலங்கா அரசாங்கத்துடன் நான் இப்போது பேச்சுக்களை நடத்திவருகின்றேன்." இவ்வாறு ராதிகா குமாரசாமி தனது பி.பி.சி. பேட்டியில் தெரிவித்தார்.
Wednesday, May 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.