[வியாழக்கிழமை, 14 மே 2009,] கனடாவின் ரொறன்ரோ மாநகரில் நடைபெற்ற மாபெரும் 'அடங்காப்பற்று' பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர். கனடிய தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து இப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. ரொறன்ரோ மாநில நாடாளுமன்ற முன்பாக உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் இருந்து நேற்று புதன்கிழமை தொடங்கிய இப்பேரணி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இப்போராட்டத்தின் மூலம் கனடிய மைய ஊடகங்களையும் அனைத்துலக சமூக அமைப்புக்களையும் தமிழர்கள் விழிப்படைய வைத்துள்ளனர் என பேரணியில் கலந்துகொண்ட தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். முன்னதாக காலை 10:00 மணிக்குப் பின்னர் வேகமாக குயின்ஸ் பார்க் மைதானத்தை நோக்கி வருகை தந்த பெருந்திரளான தமிழர்கள் ஏராளமான பதாகைகளையும் தமிழீழ தேசியக் கொடிகளையும் அமெரிக்க மற்றும் கனடிய கொடிகளையும் ஏந்தியபடி உணர்ச்சியுடன் கலந்து கொண்டனர். மக்கள் வருவதற்கு முன்னதாகவே அனைத்து மைய ஊடகங்களின் ஊடகவியலாளர்களும் ஒளிப்பதிவு வாகனங்களும் அப்பகுதிக்கு வந்து முன்னரங்கில் தமக்கு உரிய இடங்களைப் பிடிப்பதற்கு முண்டியடித்ததாக நிகழ்வினை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த தொண்டர் ஒருவர் தெரிவித்தார். குயின்ஸ் பார்க் மைதானத்தில் தமிழீழ தேசியக் கொடியையும் கனடிய தேசியக் கொடியையும் கொடிக் கம்பத்தில் ஏற்றியபின்னர், அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்படத் தொடங்கிய பேரணி, ரொறன்ரோ டவுண்ரவுண் பகுதியில் உள்ள யூனிவேர்சிட்டி வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்க துணைத் தூதரகத்தை நோக்கிச் சென்றது. வேலை நாளாக இருந்ததாலும் வேலை முடிந்து வீடு செல்கின்ற நேரம் என்பதாலும், பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணி அமைந்திருந்தது. எந்தவித சட்ட விதிகளையும் மீறாமல் அதேவேளையில் இயன்றளவு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இசை முழக்கமிட்டு பல்வேறு முழக்கங்கைளையும் எழுப்பியவாறு பேரணி நகர்ந்து சென்றது. தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் பிரதிநிதிகள், எங்கள் தலைவர் பிரபாகரன், தனித் தமிழீழமே ஒரே தீர்வு போன்ற முழக்கங்கள் தொடர்ச்சியாக முழங்கியதுடன், சிறிலங்கா அரசின் இன அழிப்பைச் சித்தரிக்கும் பாரிய பதாதைகள் தாங்கி வரப்பட்டதுடன், ஏராளமான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. - தமிழினப் படுகொலையை நிறுத்துவதற்கு உடனடிப் போர் நிறுத்தம் வேண்டும் - உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வான் வழியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிறிலங்கா அரசுக்கு எதிராக பொருளாதார-இராஜரீக தடை விதிக்க வேண்டும் - ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை கனடிய அரசு அங்கீகரிப்பதன் ஊடாக, நிரந்தர சமாதானத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேரணி இடம்பெற்றது. பேரணியில் பல்வேறு வெளிநாட்டு மனிதநேய அமைப்புக்கள், சமூக அமைப்புக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகளும் அவர்களது குழுக்களும் கலந்து கொண்டதுடன், பல நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். பேரணியில் தாங்கி வரப்பட்ட சில சவப்பெட்டிகளில், கடத்திச்செல்லப்பட்ட தமிழர்கள் சிலரின் உடல் உறுப்புக்கள் களவாடப்பட்ட பின்னர் அவர்களின் சிதைந்த உடலங்களை குளிரூட்டப்பட்ட அறையில் வைத்திருக்கின்ற படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இன அழிப்பை சித்தரிக்கும் பல்வேறு உடைகளை அணிந்தவர்களும், அந்த நிகழ்வுகளை வெளிக்கொணரக்கூடியவாறு நடித்துக் காட்டியபடி பேரணியில் சென்றனர். பேரணி நடைபெற்ற அதேநேரத்தில் வானில் பறந்த சிறிய வானூர்தி ஒன்று, விடுதலைப் புலிகளை கனடாவில் அனுமதிக்க வேண்டாம் என்று கோருகின்ற விசமத்தனமான பதாகையொன்றை இழுத்துச் செல்ல முயற்சித்தது. பேரணி ஏற்பாட்டாளர்கள் காவல்துறையினரிடம் முறையிட்டதும் காவல்துறையினர் உடனடியாக அந்த வானூர்தியை இறக்கும்படி உத்தரவிட்டனர். அந்தப் பதாகை தாங்கிய வானூர்தியை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை அறிந்து, ஒரு இனத்திற்கு எதிரான பிரச்சாரத்தை திட்டமிட்டு முன்னெடுத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டுமா என்று காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். வேறு சில சிங்கள இளைஞர்கள், சிங்கக் கொடிகளை ஏந்தியவாறு பேரணி நடைபெற்ற இடத்தை நோக்கி உந்துருளியில் வந்தபோது அதனை ஏற்பாட்டாளர்கள் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது தவிர, சில சிங்களவர்கள் தவறான துண்டுப் பிரசுரங்களை சில இடங்களில் விநியோகித்த நிகழ்வுகளும் நடைபெற்றன. பேரணியில் கலந்துகொள்ள வந்திருந்த தமிழர்களை, கனடிய உலர் உணவு சேமிப்புக்கு உதவும்படி தமிழ் ஊடகங்களும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். கனடிய உலர் உணவு நிறுவனத்தினர் ஆச்சரியப்படத்தக்க வகையில், எவரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு உலர் உணவு வகைகளை தமிழ் மக்கள் வழங்கினர். மிக அதிகளவிலான உலர் உணவு வகை தமக்கு சேர்ந்ததாக கனடிய நிறுவனத்தினர் தெரிவித்திருக்கின்றனர். பேரணி தொடர்பாக கனடிய மைய ஊடகங்களின் கருத்துக்கள், தற்போதைய சிறிலங்கா அரசின் இனஅழிப்பை நிறுத்த கனடியப் பிரதமர் நேரடியாகத் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததுடன், பல ஊடகங்கள் சிறிலங்கா அரசின் இன அழிப்பு தொடர்பான பல ஆதாரத்துடன் கூடிய கருத்துக்களையும் சேர்த்து செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, May 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.