[வெள்ளிக்கிழமை, 01 மே 2009] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் கடல்வழியாகத் தரையிறங்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் நடத்திய வலிந்த தாக்குதலிலும் ஆட்லெறி மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களிலும் 172 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 289 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் கடல்வழி தரையிறக்க முயற்சிக்கு எதிராக கடற்புலிகளும் விடுதலைப் புலிகளும் இணைந்து கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தினர். இதில் டோறா பீரங்கிப் படகும் நீருந்து விசைப்படகும் விடுதலைப் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டு கடல்வழி தரையிறக்க முயற்சியும் முறியடிக்கப்பட்டதுடன் - தரைவழியாக முன்நகர முற்பட்ட படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 352 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 722 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் சமர் - கட்டளைப்பீடத்தை மேற்கோள் காட்டி புதினத்தின் வன்னிச் செய்தியாளர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இந்த தரையிறக்க முயற்சியை படையினர் மேற்கொண்டனர். 106 மில்லி மீற்றர் ரக பீரங்கிகளால் மக்கள் மீது செறிவான தாக்குதலை நடத்தியவாறு மேற்கொள்ளப்பட்ட இந்த தரையிறக்க முயற்சிக்கு எதிராக கடற்புலிகளும் விடுதலைப் புலிகளும் இணைந்து கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தினர். இதில் டோறா பீரங்கிப் படகும் நீருந்து விசைப்படகும் விடுதலைப் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் படையினரின் தரையிறக்க முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் கடந்த புதன்கிழமை அதிகாலையும் 15 டோறா பீரங்கிப் படகுகள், 25 வரையான அரோ படகுகள் மற்றும் கூகர் படகுகளில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை தரையிறக்கும் முயற்சியாக பெரும் கடற் தாக்குதல் ஒன்றில் ஈடுபட்டபோது அதனையும் விடுதலைப் புலிகள் முறியடித்திருந்தனர். இந்த கடும் கடற் சண்டையின் போது - சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகு ஒன்று முற்றாக தாக்கி மூழ்கடிக்கப்பட்டதுடன், மூன்று அரோ படகுகளும் கடும் சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. படையினரின் கடல்வழி தரையிறக்க முயற்சிக்கு ஆதரவாக நேற்று முன்நாள் தொடக்கம் இரட்டைவாய்க்கால் வடக்கு பகுதியில் இருந்து 58 ஆவது படையணியும் தரைவழி மூலமான வலிந்த தாக்குதல்களை கனரக ஆயுதங்களின் பயன்பாட்டுடன் மேற்கொண்டிருந்தது. ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, டாங்கி மற்றும் கனரக போர்க்கலங்களுடன் இந்த வலிந்த தாக்குதலை 58 ஆவது படையணியினர் மேற்கொண்டனர். முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் மற்றும் சாளம்பன் பகுதியில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளே இந்த தாக்குதலுக்கு இலக்காகின. இதில் 172 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 289 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் இந்த தரைவழி முன்நகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 352 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 722 பேர் காயமடைந்துள்ளனர். எனினும் சிறிலங்கா படையினர் இன்று இந்த செய்தி பதிவேற்றப்படும் வரை தொடர்ச்சியாக தரைவழியாக கடுமையான வலிந்த தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையாக பதில் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். படையினரின் தாக்குதல்களின்போது மக்கள் வாழ்வ்விடங்களை நோக்கி படையினரின் எம்.ஐ.-24 ரக உலங்குவானூர்திகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
Friday, May 01, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.