[வியாழக்கிழமை, 14 மே 2009,] சிறிலங்கா இராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இலங்கையில் சாவின் விளிம்பில் உள்ள மூன்று லட்சம் தமிழர்களையும் அழித்தொழிப்பதற்கு முப்படைகளையும் தீவிரமாகப் பயன்படுத்தி வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தக் கோரி, அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலறி கிளின்ரன், பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண், வெளியுறவுத்துறைச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஆகியோருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ இன்று வியாழக்கிழமை (14.05.2009) மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் மூலமாக அவசர வேண்டுகோள் விடுத்தார். அந்த மின்னஞ்சலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா இராணுவத்தின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி மரணத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களைக் காப்பாற்ற உலகு எங்கும் வாழ்கின்ற 10 கோடி தமிழர்களின் சார்பாக வேண்டுகிறேன். தாங்கள் நேரடியாகத் தலையிட்டு இலங்கையில் நடைபெறும் மனித அழிவைத் தடுக்க உறுதியான, உடனடி நடவடிக்கை எடுத்து இலங்கையில் தவித்துக் கொண்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுகிறேன். மனிதாபிமான அக்கறையோடு, அமெரிக்க அரசாங்கம் வான்வழித் தாக்குதலை நிறுத்தவும், இராணுவத் தாக்குதலை நிறுத்தவும் விடுத்த வேண்டுகோளை சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஆணவத்தோடு நிராகரித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் இராணுவத்தின் முப்படைகளைத் தீவிரமாகப் பயன்படுத்தி காட்டுமிராண்டித்தனமான, கொடூரத் தாக்குதலை நடத்தி ஒட்டுமொத்தத் தமிழர்களை முற்றிலுமாக அழித்துவிடத் துடிக்கின்றது. மே மாதம் 12 ஆம் நாள் மாலை 6:00 மணியில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். சிறிலங்கா அரசாங்கம் மே மாதம் 17 ஆம் நாளுக்கு முன்பாக முல்லைத்தீவில் இருக்கின்ற ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று அழித்துவிடக் கங்கணம் கட்டிச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள ஒட்டுமொத்தத் தமிழ் இனமும் பட்டினியால் நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் என்று வகை வகையாக இறந்து போகின்ற தமிழர்களின் உடலங்களைப் புதைக்கவோ அல்லது எரிக்கவோ வழியில்லாமல் கிடக்கின்றது. நடந்துகொண்டிருக்கின்ற பேரழிவை விவரிக்க வார்த்தை இல்லை. மாட்சிமை பொருந்திய தாங்கள் தங்களின் நேரடி நடவடிக்கை மூலமாக இலங்கையில் இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லை என்றால் கொடிய மனிதப் பேரழிவு நிகழும். ஜேர்மனியில் நடைபெற்ற நெஞ்சைப் பிளக்கின்ற யூதர்கள் படுகொலையை விளக்குகின்ற வாஷிங்ரனில் உள்ள மனிதப் பேரழிவு அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிகளுக்கு ஒத்த நிகழ்வுகள் இலங்கையில் தமிழினத்தை முற்றிலுமாக அழிக்கும் வகையில் நடைபெறுகின்றது. இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களைக் காப்பாற்ற, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் சார்பில் கூப்பிய கரங்களோடு உங்களையும், உங்கள் அரசாங்கத்தையும் வேண்டுகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, May 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.