Friday, May 15, 2009

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மூடப்பட்டதனால் காயப்பட்டவர்கள் அவதி: பதுங்குகுழிகளுக்குள் மருத்துவர்கள்

[வியாழக்கிழமை, 14 மே 2009,] பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா அறிவித்து சில மணித்தியாலங்களில் சிறிலங்கா படையினர் அகோரமான முறையில் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதல்களினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் மருத்துவ சேவைகள் அனைத்தும் முற்றாக செயலிழந்துள்ளன. இத்தாக்குதல்களில் மருந்துப் பொருட்களும் அழிந்துள்ளன. இதனால் காயமடைந்தவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார். சிறிலங்கா படையினரின் தாக்குதல்களினால் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் எனவே மருத்துவ சேவைகளை நிறுத்துவதாகவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் ஜக்கிய நாடுகள் சபைக்கும் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை நிர்வாகம் கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளது. மருத்துவமனையை நோக்கி தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதால் அங்கு நிற்கமுடியாத நிலையில் மருத்துவர்களும் பணியாளர்களும் நோயாளர்களை கைவிட்டு வெளியேறியுள்ளனர். கடும் காயங்களுடன் இரத்தம் ஏற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் சிலரை அவர்களின் உறவுகள், காவு தடிகளில் தூக்கி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஏனைய நோயாளர்கள் உதவிகள் எதுவும் இன்றி மருத்துவமனையிலேயே கைவிடப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் வெளியே வரமுடியாத நிலையில் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர். மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் 456 உடலங்கள் காணப்படுவதால் அப்பகுதி மயான பூமியாக காட்சியளிப்பதாகவும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார். முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக இன்றுவரை நடத்திய தாக்குதல்களில் 122 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 245 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையை இலக்குவைத்து நடத்திய தாக்குதல்களில் நோயாளர்களும் கொல்லப்பட்டதாக 'புதினம்' செய்தியாளர் கூறுகின்றார். உயிரிழந்த நோயாளர்களின் 75 உடலங்களும் மருத்துவமனையைச் சூழவுள்ள பகுதிகளில் கொல்லப்பட்டவர்களின் 122 உடலங்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளன. தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் இன்று வியாழக்கிழமை பாரிய குழி ஒன்றை தோண்டி அத்தனை உடல்களையும் புதைத்தனர். எனினும் வீதிகள் மற்றும் தறப்பாள் கூடாரங்களின் கீழ் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் காணப்படுகின்றன என்றும் தங்களால் இயன்றளவு உடலங்களை மாத்திரமே தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் புதைத்து வருகின்றனர் எனவும் ஏனைய உடலங்கள் அப்படியே கிடப்பதாகவும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.