[வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009] முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் போரின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு வசதியாக சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை அவசரக் கோரிக்கையினை விடுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த இரண்டு நாள் போர் நிறுத்தம் எந்தவிதமான பலன்களையும் தராமல் முடிவடைந்திருக்கின்றது. இந்நிலையில் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள நிலைமைகள் தொடர்பாக அறிந்துகொள்வதற்காக அங்குள்ள மருத்துவ அதிகாரிகள் இருவரை அனைத்துலக மன்னிப்புச் சபை தொடர்பு கொண்டபோது அங்குள்ள மோசமான நிலைமைகள் தொடர்பாக அவர்கள் விவரித்துள்ளார்கள் எனவும் மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான விநியோகங்கள் அங்கு போதுமானதாக இல்லாமையால் அவசரமான மனிதாபிமான உதவிகள் அங்கு தேவைப்படுவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கின்றது. போர் தீவிரமடைந்திருக்கும் நேற்றைய நாள் வியாழக்கிழமை மட்டும் காயமடைந்த 92 பேர் மருத்துவனைக்கு கொண்டுவரப்பட்டதாக மருத்துவத்துறைப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்நாள் 75 பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்த மற்றொரு மருத்துவப் பணியாளர், இதில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். மருந்துப் பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்த அவர், மயக்க மருந்து, சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பிளேட் மற்றும் அடிப்படையான ஏனைய மருத்துவப் பொருட்களும் கையிருப்பில் இல்லை எனத் தெரிவித்துள்ளார். போர் இடம்பெறும் பகுதி சிறிலங்கா அரசாங்கத்தினால் முற்றுகையிடப்பட்டு, உதவிப் பணியாளர்களோ அல்லது சுயாதீனமான மனித உரிமைகள் அவதானிகளோ அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாது தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்தச் செய்திகளை உறுதிப்படுத்த முடியாது இருப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கின்றது. தொடரும் இந்த போரால் இந்த வருட தொடக்கத்தில் இருந்து 2,800-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும், 7,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் இருப்பதாக மார்ச் மாதத்தில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "மனிதாபிமான அடிப்படையிலான போர் இடைநிறுத்தம் ஒன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தியிருக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் சாம் சாரிப், "தொடரும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் ஆபத்தான நிலைமைக்குள் உள்ளார்கள். அவர்கள் தமது உயர்களையிட்டு அச்சத்துடனேயே உள்ளனர்" எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். "விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்வதை உறுதிப்படுத்துவதற்காக சுயாதீனக் கண்காணிப்பாளர்களை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்திருக்கும் அவர், "விடுதலைப் புலிகளும் பொதுமக்களை கவசமாகப் பயன்படுத்தக் கூடாது" எனவும் தெரிவித்திருக்கின்றார்.
Friday, April 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.