[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நாளை கொழும்பு வருவதற்கான அனுமதியை வழங்கிய சிறிலங்கா அரசாங்கம், சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு அனுமதியை வழங்க மறுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. சுவீடனுடன் மற்றொரு சந்தர்ப்பத்தில் இரு தரப்பு உறவுகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்து நாசூக்கான முறையில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகையை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தடுத்துவிட்டதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேலிட் மிலிபான்ட், வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுடன் நேற்று திங்கட்கிழமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமது வருகை தொடர்பாகப் பேசியதாகவும், அப்போதே சுவீடன் அமைச்சரின் வருகைக்கு சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை என்பது அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டன. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கெளச்சல், மற்றும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் சால்ஸ் பில்ட்ற் ஆகியோர் சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு நாளை கொழும்பு வரவிருப்பதாக பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண் நேற்று முன்நாள் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று தமது பயணம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசி மூலம் விரிவான பேச்சுக்களை நடத்தினார். இதன்போதே சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் வருகையை தாம் விரும்பவில்லை என்பதை அமைச்சர் ரோகித போகல்லாகம தெரியப்படுத்தியிருக்கின்றார். சுவீடன் வெளிவிவகார அமைச்சரை கொழும்பு வருமாறு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு எதனையும் அனுப்பிவைக்கவில்லை எனத் தெரிவித்த போகல்லாகம, சுவீடனும் கோப்பன்ஹேகனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் இவ்வாறான விருப்பம் எதனையும் தெரிவித்திருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். இருந்தபோதிலும், இவ்வாறான விண்ணப்பம் ஒன்றை சுவீடனில் உள்ள சிறிலங்காவின் தூதரகத்தில் சுவீடன் வெளிவிகார அமைச்சர் கையளித்ததாகவும், அதனை தூதரக அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். ஆனால், இவ்வாறான விண்ணப்பம் எதுவும் கிடைக்கவில்லை என போகல்லாகம மறுத்துவிட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
Tuesday, April 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.