Tuesday, April 28, 2009

பிரித்தானியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டமும் உண்ணாநிலைப் போராட்டமும் மேலும் தீவிரம்

[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக தமிழ்மக்களால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டமும் சுப்பிரமணியம் பரமேஸ்வரனால் அங்கு முன்னெடுக்கப்படும் சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டமும் மேலும் தீவிரமாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள தமிழ்மக்களால் கடந்த 23 நாட்களாக இரவு- பகல் பாராது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருவதுடன் சுப்பிரமணியம் பரமேஸ்வரனால் 22 நாட்களாக அங்கு சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி சிறிலங்கா அரசிற்கு எதிரான தமது கண்டனத்தை வெளிப்படுத்தி வருவதுடன், இலங்கையில் உடனடியாக நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்படுத்துமாறும் அனைத்துலக சமூகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் தமிழ்மக்கள் இன அழிப்புச் செய்யப்படுவதற்கு எதிராக நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம், சிறிலங்கா தூதரகம் ஆகியனவற்றுக்கு முன்பாகவும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களால் இந்திய தூதரகத்தின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் இடம்பெறும் போரை இந்திய அரசாங்கம் ஊக்குவிப்பதைக் கண்டித்தே அந்த தூதரகம் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இச்சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு மேலதிக காவல்துறையினர் அழைக்கப்பட்டு நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் நேற்று மாலையில் விடுவிக்கப்பட்டபோதும் ஒருவர் தொடர்ந்தும் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குழுமியதை அடுத்து சிறிலங்கா தூதுவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காவல்துறையினரால் அங்கு அழைத்து வரப்பட்டார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அங்கு குழுமியிருந்தததால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சிறிலங்கா தூதுவர் தூதரக வளாகத்தில் வழக்கமாக ஏற்றும் சிறிலங்காவின் தேசியக்கொடியை அவசர அவசரமாக தலைகீழாகவே ஏற்றினார். பின்னர் அது மீண்டும் இறக்கி ஏற்றப்பட்டது. இதைவிட பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் வழக்கம்போன்று எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் பல்வேறு முழக்கங்களை உரத்து எழுப்பிய வண்ணம் இருந்தனர். "எங்களுக்கு உடனடிப் போர்நிறுத்தமே வேண்டும் " "மக்கள் பாதுகாப்பு வலயங்கள் கொலைக்களங்களா?'' "தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடன நீக்க வேண்டும்" "ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்காவில் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும்" ஆகிய முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உரத்து எழுப்பியவண்ணம் இருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் நேற்று முன்நாள் இரவு 10:00 தொடக்கம் தண்ணீர் அருந்துவதை நிறுத்தி தனது போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார். "உலக சமூகம் எமது மக்களை ஏமாற்றி வருகிறது. எங்களது கோரிக்கைகளுக்கு அது உரிய பதிலளிக்கவில்லை. காலத்தை அது இழுத்தடித்துக் கொண்டே செல்கிறது. எனவேதான் உலக சமூகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தியுள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். தண்ணீர் அருந்துவதை நிறுத்தி அவர் தனது உண்ணாநிலைப் போராட்டத்ததை தொடர்வதால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.